கொழும்பு: இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையரின் மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று (மார்ச் 12) அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, விடயங்களை தெளிவூட்டிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சிறுவன் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எந்தவிதத்திலும் அச்சப்பட தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், சுகாதார பிரிவினரால் வழங்கப்படும் அறிவித்தல்களை மாத்திரம் நம்புமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
போலீஸார் விசேட கோரிக்கை
கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என இலங்கை போலீஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அவ்வாறு போலி தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.