கொரோனா வைரஸ் – ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய அறிவிப்பு

இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும்.“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக.” (அத்-தௌபா : 51) என்று அல்லாஹுதஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான்.

பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹுதஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹுதஆலா எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அதற்கான சில துஆக்களை கற்றுத்தந்துள்ளார்கள்.

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه و سلم كان يقول ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ” (سنن أبي داود : 1554)

“யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக் கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனனு அபீ தாவூத் : 1554)

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (سنن الترمذي :3388)

“அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய பெயரைக் கூறுவதுடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் தீங்கிழைக்க முடியாது. அவன் எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.” (ஸுனன் அத்-திர்மிதி : 3388)

மேற்படி துஆக்களின் கருத்துக்களை நாமும் விளங்கி தினமும் ஓதி வருவதால், இப்படியான கொடிய நோய்களிலிருந்து அல்லாஹுதஆலா எம்மைனைவரையும் பாதுகாப்பான். மேலும், “கொள்ளை நோய்கள் ஏற்படும் போது அப்படியான இடங்களுக்குச் செல்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளதோடு, ஒருவர் இருக்கும் இடத்தில் இப்படியான நோய்கள் ஏற்படும் போது அந்த இடத்தை விட்டும் ஓட வேண்டாம்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால், அதனைக் கட்டுப்படுத்த ஒவ்வவொரு நாடும் தற்பாதுகாப்பு முயற்சிகளைச் செய்து வருகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.

அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு முஸ்லிம்களையும் குறிப்பாக மஸ்ஜித் நிர்வாகங்களையும் வேண்டிக் கொள்கின்றது.

ஒவ்வொருவரும் இத்தகைய வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுதல்.
பாவங்களை விட்டும் தன்னைத் தூரமாக்கி, தாம் செய்த பாங்களுக்காக தொளபா இஸ்திக்பார் செய்தல்.
மஸ்ஜித், அதைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் தாம் வசிக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளல்.
மஸ்ஜிதுடைய ஹவ்ழ்களில் வழூ செய்வதைத் தவிர்த்துது தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தல் அல்லது வீட்டிலிருந்தே வுழூ செய்து கொண்டு மஸ்ஜிதுக்கு செல்லுதல்.
“வுழூவை அழகான முறையில் செய்து தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்களுக்கும் ஒரு பாவம் மன்னிக்கப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

எதிர்வரும் வாரங்களில் ஜுமுஆக்களை 20-25 நிமிடங்களுக்குள் சுருக்கிக் கொள்ளல்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தலின் படி இது ஒரு சாதாரண நோயாகும். முகப் பிரதேசங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமும், மூக்கு, வாய் போன்ற துவாராங்களை அடிக்கடி தொடாமல் இருப்பதன் மூலமும், தும்மல் விடும் போது மூக்கு, வாயை மூடிக் கொள்வதன் மூலமும் இந்நோயைத் தடுத்துக் கொள்ளலாம்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தும்மினால் அவர்களது முகத்தை கையினால் அல்லது பிடவையினால் மூடிக்கொள்வார்கள், இன்னும் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.” (ஸுனன் அத்-திர்மிதி)

மஸ்ஜித் மற்றும் வசிக்கும் இடங்களை காற்றோட்டம் உள்ளதாகவும் சூரிய வெளிச்சம் வரும் வகையிலும் ஆக்கிக் கொள்ளல்.
தடுமல், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் சன நெரிசல் உள்ள இடங்களை தவிர்த்தல்.
தடுமல், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோயின் அறிகுறிகளை, குறிப்பாக வயோதிபர்கள், தொடர் நோய் உள்ளவர்கள் உணரும் போது உடனடியாக வைத்தியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன் பிரகாரம் நடந்து கொள்ளல்.
ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளல்.

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் – பத்வாப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s