கொழும்பு: இலங்கைக்குள் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார். சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த பின்னணியில், நேற்று முன்தினம் நாட்டிற்குள் மற்றுமொரு நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

இலங்கைக்குள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்றாலும், இந்த தொற்று காரணமாக நாட்டிற்குள் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், குறித்த இலங்கையரின் குடும்பத்தினர் அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுகாதார பிரிவினர் சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உணவு வகைகளை வெளியிலிருந்து வழங்கி வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.