கொழும்பு: உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சுத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுக்கும் அவரது என்.டி.ஜே. எனப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் நிதியுதவி அளித்து வந்த முக்கிய நபர்கள் 7 பேரைத் தேடி சி.ஐ.டி. விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுவரை விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்டுள்ள விடயங்களை மையபப்டுத்தி இந்த சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சட்டத்தரணி ஒருவர், பொறியியளாளர் ஒருவர், இரு வைத்தியர்கள், இரு வாகன விற்பனையாளர்கள் இந்த 7 பேரில் உள்ளடங்குகின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த 7 பேரும் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகித்திருக்கும் சி.ஐ.டி.யினர், அவர்களில் சிலர் அவுஸ்திரேலியா, துருக்கி மற்றும் அமெரிக்கவில் இருப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி இன்டர்போல் மற்றும் சர்வதேச உளவுத் துறைகளின் உதவியோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.