மட்டக்களப்பு மாவட்டத்தில் ரமழான் முஹம்மது இம்ரான் மற்றும் அசனார் முஹம்மது அஸ்மி ஆகியோரின் தலைமையிலான 2 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இது வரை 9 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கடந்த புதன்கிழமை (04) முதல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை ஆரம்பமானதோடு, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி 12 மணியுடன் அது நிறைவடைகின்றது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை என்பதோடு, சுயேச்சைக் குழுக்கள் வேட்பாளர் ஒருவருக்கு தலா ரூபா 2,000 வீதம் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, களுத்துறை மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 9 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் எம்.பீ. நடராசா, இருக நாமல் லியனபதிரண, கொடோஉட பதிரணகே ஷாந்த ஆகியோரின் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மயில்வாகனம் விமலதாஸ், ஐங்கரநேசன் பொன்னுதுரை, விக்டர் அந்தனி வில்லியம்ஸ் ஆகியோரின் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரமழான் முஹம்மது இம்ரான் மற்றும் அசனார் முஹம்மது அஸ்மி ஆகியோரின் தலைமையிலான 2 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் உடவத்தகே மஹிந்த சில்வா தலைமையிலான சுயாதீன குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலில் தாபல் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானோர் இன்று (06) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளுக்காக, அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட 2 இலட்சம் பேரை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.