கொழும்பு: இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தை மறந்து அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் அனைவரும் மரணித்துவிட்டதாகவும் மீண்டும் அடித்துக் கூறியுள்ள கோட்டாபய ராஜபக்ச, அதனால் அந்தப் பிரச்சனை தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விலகியதுடன் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது
இருப்பினும் ராஜபக்ச அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி மீது நம்பிக்கை கொள்ளமுடியாது என்று கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெஷிலே, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னிலையிலேயே நிராகரித்திருந்தார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் ராஜபக்ச அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறை யோசனையை நிராகரித்து வருவதுடன், சர்வதேச சமூகம் தலையிட்டு சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக தமக்கான நீதியை நிலைநாட்டிக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்