வெறும் பானைக்குள் புரியாணி தேடும் படலத்தை அண்மைய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எமது முஸ்லிம் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவது கவலையான ஒரு விடயம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைகள் தீர்மானம் எடுக்க முன்னர் அனுபவம் குறைந்த சில இளவயது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து முந்திரிய விதை போன்று முந்திக்கொண்டு வந்து சந்தைப்படுத்தி இறுதியில் படுதோல்வியடைந்த விரக்தியில் இருந்து இன்னும் மீண்டுவராத இவர்கள் இப்போது புதிய கோஷத்துடன் மீண்டும் மக்களை மடையர்களாக்க வந்துள்ளார்கள் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.

மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது உரையில் மேலும்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கிழக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் சஜித் பிரேமதாசாவை நாங்களே ஜனாதிபதி வேட்பாளராக பிரேரித்ததாகவும் நாங்களே அவரின் வெற்றியின் பங்காளியாகும் என்றும் கோஷங்களை எழுப்பி வந்தார். போதாக்குறைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அதற்க்கு ஏற்றாற்போல பக்கவாத்தியம் வாசித்துவந்தார். ஆனால் இறுதியில் கிழக்கு மக்களை முட்டாள்களாக்கி சிங்கள மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் நிலைக்கு எமது சமூகத்தை அடையாளப்படுத்த காரணமாக அமைந்தார்கள்.

14 இலட்சம் மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ அவர்கள் இருக்க, திட்டமிடலில் தனக்கு நிகராக தானே இருக்கும் பசில் ராஜபக்ச இருக்க, அரசியல் காய் நகர்த்தல்களில் முதிர்ச்சியான நிலையில் இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்க, இப்போது புதிய கோஷமாக சஜித்தை பிரதமராக்குவோம் என்றும் எங்களது உதவி இல்லாமல் ஆட்சியைக்க முடியாது என்றும் சிங்கள மக்களை சூடாக்கும் பேச்சுக்களை தொடர்ந்தும் எமது அரசியல் தலைமைகள் செய்துவருவதை சமீபத்தைய அறிக்கைகளில் காணும் போது இவர்களின் முட்டாள்தனங்களின் உச்சத்தை அறியலாம்.

தாங்களே அரசை உருவாக்கும் சக்திகள் எனும் கோசத்தை எழுப்பி முஸ்லிங்கள் செறிந்துவாழும் பிரதேசங்களுக்கு வந்து வாக்குகளை சேகரிப்பது. அவர்களது சொந்த பிரதேசங்களுக்கு சென்று பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவரும்படியாக பேசி வாக்குகளை பெறுவது இதுவே எமது அரசியல் தலைமைகளின் தொண்டு தொட்ட வழமையாக இருந்து வருகிறது. மஹிந்த அரசை ஏசுவதும் பின்னர் பின்வழியால் சென்று அமைச்சை பெறுவதும் வாடிக்கையாக கொண்ட எமது தலைமைகள் எப்போதும் தமது ஆசனங்களையும், தமது சுகபோகங்களையும் பதவி பட்டங்களையும் மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்படுகிறார்களே தவிர மக்களின் பிரச்சினைகளை பற்றி அக்கறை செலுத்துவதில்லை.

இவர்களது விஷம, இனவாத பிரச்சாரங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மொட்டுக்கு வழங்கிய வாக்குகளை விட அதிகமாக மேலும் அதிகரிக்க செய்யும் என்பதுடன் அரசை பலமானதாக உருவாக்க வழிசமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்களில்லை. இவர்களது விஷம பிரச்சாரங்களை நம்பி இவர்களின் பின்னால் சென்றால் மக்கள் நடுத்தெருவில் நிற்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். பாடலுக்கும், செப்பு பித்தளைக்கும், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் வாக்களிக்கும் நிலையிலிருந்து மக்கள் விடுபட்டு தமது எதிர்கால சந்ததியின் நிலையானதும் நிம்மதியானதுமான வாழ்க்கைக்கு தமது வாக்குகளை சிந்தித்து வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் முஸ்லிங்கள் தமது பிரதேசங்ககளில் பல வருடங்களாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகிறோம். அவற்றை சரியான வியூகங்களுடன் நாம் தீர்த்து கொள்ள வேண்டியுள்ளது. மாத்திரமின்றி இலங்கை பிரஜைகளாகிய நாம் ஏனைய நமது சகோதரத்துவ இனங்களுடன் ஒன்றிணைந்து வாழவேண்டிய காலகட்டடத்த்தில் இருக்கிறோம். அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களின் பேராதரவை பெற்ற இந்த அரசை பலப்படுத்தி சகல இன மக்களும் ஏற்றுக்கொண்ட ஆளுமையான முஸ்லிம் தலைமைகளை நமது பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்ப முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Nurul Huda