கொழும்பு ஷங்ரி லா ஹோட்டல் மற்றும் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்தாரிகளின் தந்தையான மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு பதில் நீதவான் சஞ்ஜீவ அன்டனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தெமட்டகொடையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தினமான, ஏப்ரல் 21 ஆம் திகதி சகோதரர்களான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இல்ஹாம் ஷங்ரி லா ஹொட்டலிலும், மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இன்சாப் சின்னமன் கிராண்ட் ஹோட்டலிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரின் தந்தையே மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் என்பவராவார்.