கொரோனா வைரஸ்: சீனாவுக்கு அடுத்ததாக சிங்கப்பூர் பயப்படுவது ஏன்?

கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.

ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டறியப்பட்டாலும், சிங்கப்பூரில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று சீனாவுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வர்த்தக உறவுகள். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் சுமார் மூன்றரை மில்லியன் சீன மக்கள் சிங்கப்பூருக்கு வந்திருப்பதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை நாம் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக உலக நாடுகளை விமானப் பயணத்தின் மூலம் இணைக்க கூடிய முக்கிய மையமாக செயல்படும் ச்சங்கி விமான நிலையத்தை கூறலாம். இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு 80 விநாடிகளுக்கும், ஒரு விமானம் புறப்படுகிறது ஒரு விமானம் தரையிறங்குகிறது. அந்த அளவுக்கு மிகவும் பரபரப்பான இயங்க கூடிய, வெளிநாட்டு மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி..

இது மட்டுமல்லாமல் தொழில்ரீதியான சந்திப்புகளுக்கும், கூட்டங்களுக்கும் சிங்கப்பூரை பலரும் தேர்ந்தெடுப்பதால், உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அடிக்கடி சிங்கப்பூருக்கு வருவதும் வழக்கமான ஒன்று. ஆனால் அப்படி நடைபெற்ற கூட்டம் ஒன்றுதான், சீனா தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா பரவ காரணமாக இருந்துள்ளது என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாத மத்தியில், சிங்கப்பூரில் சீனா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

சீனாவை சேர்ந்த சிலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 41 வயதான மலேசிய நபர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து அந்த மலேசிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்து அந்த நபர் மூலம் அவருடைய தாய் மற்றும் சகோதரிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதே கூட்டத்தில் கலந்து கொண்ட தென்கொரியாவைச் சேர்ந்த இருவருக்கும் சில நாட்களுக்கு பிறகு கொரோனா இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று சிங்கப்பூர் வாசிகளுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது அடுத்தடுத்து கண்டறியப்பட்ட்து. ஆனால் இந்த தொற்று, அவர்கள் தத்தம் நாடுகளுக்கு சென்ற பின்னர்தான் உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னரே தெரியவரும் என்பதால், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீனர்களுக்கு தாங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவில்லை. இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் வெகு எளிதாக பரவியுள்ளது.

அதிலும் குறிப்பாக பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீவ் வெல்ஷ் என்பவர், சிங்கப்பூர் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிரான்ஸில் உள்ள சுற்றுலா விடுதியில் விடுமுறையை கழிப்பதற்காக தங்கியுள்ளார். இந்த காலகட்டத்தில் அவரிடமிருந்து 11 பேரை கொரோனா தாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. அதில் ஐந்து பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், ஐவர் பிரான்ஸை சேர்ந்தவர்கள், ஒருவர் ஸ்பெயினை சேர்ந்தவர்.

ஆனால் சிங்கப்பூரின் கவலை அந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட 100 பேர் மட்டும் அல்ல. ஏனென்றால் கொரோனா தொற்று தொடங்கிய டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை சிங்கப்பூரில் நடைபெற்ற, சீன நபர்கள் கலந்து கொண்ட வர்த்தக கூட்டங்களில் உடன் யாரெல்லாம் பங்குபெற்றுள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைப்பது ஒரு கடினமான பணியாக உள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் நடைபெற்று வந்த போராட்டங்களால், பல சீனர்கள் ஹாங்காங்கை தவிர்த்துவிட்டு சிங்கப்பூருக்கு சுற்றுலாவுக்கு வந்து சென்றிருப்பதும் இந்த கவலையை அதிகரித்துள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி, மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட சிங்கப்பூரில் இனிமேலும் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அந்நாட்டின் அதிமுக்கியமான கவலையாக தற்போது உள்ளது.

ஆனால் இந்த மூன்று கவலைகளையும் சிங்கப்பூர் தற்போது திறம்பட கையாண்டு கொண்டிருக்கிறது. இதற்கான மிகக் கடுமையான நடவடிக்கைகளையும் அந்நாடு எடுத்து வருகிறது.

சீனாவுடனான தனது எல்லை அடுத்த 14 நாட்களுக்கு மூடப்படும் என சிங்கப்பூர் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதனால் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற மற்றும் சிங்கப்பூரில் பணி செய்ய பர்மிட் பெற்ற சீன நாட்டினர் யாரும் சிறிது நாட்களுக்கு சிங்கப்பூருக்குள் வர முடியாது.

கொரோனா தொற்று தொடர்பாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள யாராவது விதியை மீறினாலோ அல்லது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றாலோ அவர்களது பணிக்கான பர்மிட் ரத்து செய்யப்படும். அவர்கள் சிங்கப்பூரில் பணி செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட அந்த பணியாளரின் உரிமையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்க முடியாது.

மேலும் மில்லியன்கணக்கான சிங்கப்பூர் மக்களுக்கு அரசே முகமூடிகளை விநியோகித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் அரசே வாட்ஸ் ஆப்பில் அப்டேட் அளிக்கிறது.

இருந்தாலும் சிங்கப்பூர் மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் குறைந்தபாடில்லை. ஏனெனில் சிங்கப்பூர் மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட, சீனர்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய, பரப்பளவில் மிகச்சிறிய நாடு என்பதால் இந்த அச்சம் இயல்பாகவே சிங்கப்பூர் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் குறித்த செய்திகள் வரத்தொடங்கிய போதே சீனாவுடனான எல்லைகளை மூடாமல் தாமதப்படுத்தியதே, கொரோனா தொற்று சிங்கப்பூரில் அதிகரிக்க முக்கிய காரணம் என அந்நாட்டு மக்கள் அரசை விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s