கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையற்ற நேரத்தில் முகமூடி அணிவதால், பணம்தான் வீண் விரயமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“நோயற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை முகமூடிகளை அணியுமாறு அரசாங்கம் மக்களை அறிவுறுத்தவில்லை என்று, அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, முகம் மூடிகளை அதிக விலைக்கு சில வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் இலங்கையில் பரவியுள்ள நிலையில், கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் முகமூடிகளை கணிசமானோர் அணியத் தொடங்கியுள்ளனர்.