கல்குடா அரசியல் கள நிலைமை! கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா?

– எம்.ரீ. ஹைதர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 மொத்த வாக்காளர்களில் 35,338+ முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். (KPW & KPC) (இதில் புணானை கிழக்கு வாக்காளர்கள் உள்ளடக்கப்படவில்லை) இவ்வாக்காளர் தொகையானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய இரு முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் உடன் ஒப்பிடும்போது கணிசமானளவு அதிகமாகும்.

அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 5 பாராளுமன்ற ஆசனங்களில் ஆகக்குறைந்த 1 ஆசனம் கல்குடாப் பகுதிக்கே கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும். இது இவர்களது ஒருமித்த வாக்களிப்பிலேயே தங்கியுள்ளது. கடந்த கால தேர்தல்கள் இதற்குச் சான்றாகும். 2005 இல் காத்தான்குடியில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவும், ஏறவூரில் போட்டியிட்ட பசீர் சேகுதாவூதும் தோல்வியடைய கல்குடாவில் அமீர் அலி வெற்றிபெற்றிருந்தார்.

கடந்த கலத்தை நோக்குவோமாயின் :

கடந்த 9 வது பாராளுமன்றத் தேர்தலில் (1989) மட்டக்களப்பு மவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அறிமுகத்துடன் போட்டியிட்ட M.L.A.M. ஹிஸ்புல்லா வெற்றி பெற்றதுடன் அதற்கடுத்த 10 வது தேர்தலிலும் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இவ்வாறு இரு தடவைகள் ஹிஸ்புல்லா தெரிவாவதற்கு கல்குடா முஸ்லிம்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கல்குடா வாக்காளர்கள் அதுவரை பிரதேசவாதமின்றி ஒரே சமூகமென்ற வகையில் வாக்களித்திருந்தனர்.
எனினும் 2 வது தடவை ஹிஸ்புல்லா போட்டியிடும் சந்தர்ப்பத்தில் கல்குடா முஸ்லீம்களது அரசியல் அபிலாஷைகளில் ஒன்றான பாராளுமன்ற பிரதிநிதித்துவ அவாவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக அவரிடம் தெரிவித்தபோது கல்குடா அவருக்குச் செய்த நன்றிக் கடனுக்காக 2 வது தடவை (1994) தான் தெரிவானால் தனது பதவிக் காலத்தில் 2 வருடங்களை நிச்சயமாக கல்குடா தொகுதி வேட்பாளரான முகைதீன் அப்துல் காதருக்கு வழங்குவதாக அவர் வாக்களித்திருந்தார்.

எனினும் பின்னர் கல்குடா வாக்காளர்களது பெரும் பங்களிப்புடன் அவர் வெற்றி பெற்றதும் வழங்கப்பட்ட வாக்குறுதியானது காற்றில் பரக்கவிடப்பட்டது. முனாபிக் தனமாக அன்று ஹிஸ்புல்லா கல்குடா முஸ்லிம்களை ஏமாற்றினார்.

அன்றிலிருந்துதான் அதுவரைக்கும் காணப்படாத பிரதேசவாதம் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் மெல்ல மெல்ல தலைதூக்கியது. அதற்கு முழுக் காரணமாக ஹிஸ்புல்லா இருந்தார். அதாவது பிரதேசவாத சிந்தனை வளர பிரதான காரணமாக ஹிஸ்புல்லாவின் அரசியல் போக்கு காரணமாயிருந்தது.

எந்தளவுக்கு ஹிஸ்புல்லாவின் இந்த வாக்கு மாறல் இப்பிரதேசத்தில் உச்ச நிலையை அடைந்திருந்ததென்றால் அதுவரை ஓட்டமாவடி நகர்ப் பிரதேச பிரதான வீதியில் அமைந்திருந்த ஜவுளிக் கடைகள் உட்பட பெரும்பாலான கடைகளை உரிமையாகவும் வாடகை அடிப்படையிலும் வைத்திருந்த காத்தான்குடி வர்த்தகர்கள் அனைவரையும் இப்பிரதேசத்தை விட்டும் 100% அப்புறப்படுத்தும் அளவுக்கு உச்ச நிலையை அடைந்திருந்தது. வாதப்பிரதிவாதங்களுக்கும் மத்தியில் அன்று காத்தான்குடி வர்த்தகர்கள் அனைவரும் ஓட்டமாவடி பஸாரிலிருந்து துரத்தப்பட்டனர்/அப்புறப்படுத்தவும் பட்டனர்.
ஆம் அதன் பயனாக 2000-10-18ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 11 வது பாராளுமன்றத் தேர்தலில் கல்குடா முஸ்லிம் வாக்காளர்கள் ஏறக்குறைய 100% ஒற்றுமையாகவும் திட்டமிட்டும் வாக்களித்து ஹிஸ்புல்லா போட்டியிட்ட அதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாகவே அவரைத் தேர்தலில் தோற்கடித்து தமது 1 வது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்று வெற்றியீட்டினர். இவ்வெற்றியானது அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திலன்றி இலங்கை முஸ்லிம்களால் வியந்து நோக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வெற்றியாகுமென்று சொன்னால் அது மிகையல்ல.
ஏன், ஒட்டு மொத்த இலங்கை முஸ்லீம்களும் கல்குடா முஸ்லீம்களைப் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மூக்கின்மேல் விரல் வைத்து பேசுமளவுக்கு அன்றைய கல்குடவின் முதலாவது அரசியல் வெற்றி சரித்திரம் படைத்திருந்தது. அந்த சரித்திரத்தின் கதாநாயகன்தான் கல்குடாவின் 1 வது பாராளுமன்றப் பிரதிநிதி M.B. முகைதீன் அப்துல் காதர் அவர்களாகும்.
அதன் பின்னர் சொற்ப காலத்தில் கல்குடாவின் முதல் கதாநாயகனாகிய முகைதீன் அப்துல் காதர் நோய்வாய்ப்பட்டு 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மரணமானர்.
முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியான முகைதீன் அப்துல் காதரைப் பொறுத்தவரை அவர் மேட்டுக் குடி என்று சொல்லக்கூடிய வர்த்தகப் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தபோதும் ஊரிலுள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக் கூடியவராகவும் எல்லோரையும் மதிக்கக் கூடியவராகவும் எல்லோராலும் மொஹிதீன் நாநா என்று செல்லமாக அழைக்கப்படக் கூடியவராகவும் மிகவும் சிறந்த குணமுடையவராகவும் வாழ்ந்து மறைந்தார்.
அவர் மீன்பிடி பிரதி அமைச்சராகப் பதவி வகித்தபோது தற்போதைய பிரதமராயிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீன்பிடி அமைச்சராக இருந்தமையும் இருவரும் மிக நெருங்கிச் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மொஹிதீன் அப்துல் காதர் மரணித்தபோது மஹிந்த ராஜபக்ஷ அவரது ஜனாசா நல்லடக்க வேளையில் இங்கு சமூகமளித்திருந்தார்.
முகைதீன் அப்துல் காதர் அவர்களது நற்குணங்களுக்காகவே கல்குடா மக்களும் அன்று ஓரணியில் திரண்டனர் என்றாலும் அது மிகையல்ல.
அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக செயற்பட்டபோது அவரது தலைமையில் செயற்பட்ட ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஈஸஸாலெவ்வை மாஸ்டர், மஃரூப் (ரியோ ஸ்டூடியோ), புர்கான், இஸ்ஹாக் மௌலவி முஸ்தபா (GM MPCS), செய்னுதீன் ஷாப் (காவத்தமுனையின் முதல் பிரதேச சபை உறுப்பினர்) என்பவர்கள் விசேடமாகக் குறிப்பிடக் கூடியவர்களாவர்.
தற்போதைய உறுப்பினர்களுக்குள்ள தீவிர விமர்சனங்கள் இவர்களுக்கு இருந்ததில்லை என்பதும் ஒரு விசேடமாகும். இவர்களில் எதிர்க்கட்சி உறுப்பினராகச் செயற்பட்ட இஸ்ஹாக் மௌலவி செல்வாக்குள்ளவராகக் காணப்பட்டார். அக்காலத்தில் ஜனரஞ்சகம் வாய்ந்த ஒருவராகக் காணப்பட்ட இஸ்ஹாக் மௌலவி மக்களுடன் மிகவும் நெருக்கமானவராகவும் அன்பானவராகவும் காணப்பட்டார். அக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களும் அவரை வித்தியாசமான கண்ணோட்டத்தில் நோக்கவில்லை. ஷியா என்ற வேறுபாடும் கோசமும் ஏற்படுத்தப்படும் வரை அவரை மக்கள் தங்களில் ஒருவராகவே நேசித்தனர்.
சியோனிச இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக பேரணிகள் ஆர்ப்பாட்டங்களை எமது பகுதியில் அதிகம் நடாத்திக் காட்டிய ஒருவராக இஸ்ஹாக் மௌலவி திகழ்ந்தார். அக்காலப் பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டக்கூடிய ஆளுமையும் அவரிடம் காணப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான பதவியான கட்சியின் பொருளாளர் பதவியை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எமது மொஹிதீன் அப்துல் காதருக்கே வழங்கியிருந்தார். இது அவரது நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் வழங்கப்பட்டதாகும். அவர் பொருளாளராயிருந்தபோது விமர்சனங்கள் எதுவும் எழவுமில்லை. கட்சியிலிருந்து எதையும் பெற்றுக்கொண்டு நயவஞ்சகமாக கட்சிக்கு துரோகம் செய்யவுமில்லை.
இவ்வாறு முகைதீன் அப்துல் காதர் அவர்களால் 100% ஒன்றுதிரட்டப்பட்ட கல்குடா முஸ்லிம்களை அவரது மறைவுக்குப் பின்னர் தலைமை ஏற்றவரால் நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
ஆம், முகைதீன் அப்துல் காதர் அவர்கள் மரணப்படுக்கையில் இருதித் தருவாயில் இருந்தபோது அவரது ஒப்புதலுடனேயே அமீர் அலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார். அவர் கையெழுத்திடா விட்டிருந்தால் அமீர் அலி அரசியலில் மக்களிடம் பிரபல்யமடைந்திருக்க வாய்ப்பின்றிப் போயிருக்கும். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து கையெழுத்திட்ட பெருமை முகைதீன் அப்துல் காதரையே சாரும்.
ஆரம்பத்தில் அமீர் அலியை வேட்பாளராக அறிவிக்கும் பத்திரத்தில் முகைதீன் அப்துல் காதர் கையொப்பமிட மறுத்ததாகவும் எனினும் இப்பகுதியில் செல்வாக்குமிக்க சில ஹாஜிமார்களான அஸீஸ் ஹாஜி, லெப்பை ஹாஜி, ஹனீபா ஹாஜி, இஸ்மாயில் ஹாஜி போன்றவர்களது வற்புறுத்தலாலேயே கையெழுத்திட்டதாகவும் குறித்த ஹாஜிமார்களே கூறியிருந்தமை இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2004 இல் இரண்டாந் தர வேட்பாளராக கல்குடாவில் அமீர் அலி முகைதீன் நாநாவின் சிபாரிசில் அரசியலில் காலடியெடுத்து வைத்தார்.
அமீர் அலியின் அரசியல் ஆரம்ப பிரவேசத்தைக் கூறுவதென்றால் அவர் அறிமுகமான வேளையில் பிரபலமிக்கவராக இருக்கவில்லை என்பதே உண்மை. அவர் சிறு வயதைத் தவிர அதிக காலம் ஊரில் வசிக்கவில்லை. காரணம் அவர் சுங்கத் திணைக்களத்தில் கடமையாற்றியதால் கொழும்பில் வாழ்ந்துகொடிருந்தார்.
வெளிப்படையாகச் சொல்வதென்றால் அவர் கல்குடாவில் 2004 இல் களமிறக்கப்பட்டபோது கொழும்பிலிருந்து அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நாவலடியிலிருந்து வாகன பவனியாக ஊருக்குள் அழைத்துவரப்பட்டபோது ஊருக்குப் புத்தம் புதிதான அவர் எப்படி தோற்றமானவராக இருப்பார் என்பதை பார்ப்பதற்கே மக்கள் வீதிகளில் ஆவலுடன் ஒன்று கூடினர். அந்தளவு ரெடிமேட் அரசியல் வாதியாக அவர் களமிறங்கினார்.
அன்று அமீர் அலி அல்ல எவர் களமிறக்கப்பட்டாலும் வெற்றிபெறக்கூடிய ஆதரவும் ஊர்களின் ஒற்றுமையும் மேலோங்கியிருந்தது.
அதன் காரணமாக எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் எதுவித சிரமமுமின்றி மிக இலகுவாக 2-4-2004 இல் இடம்பெற்ற 13 வது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாகும்.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு வெற்றியாக அமைந்திருந்தது. அத்தேர்தலில் மனாப்ப என்று சிங்களத்தில் சொல்லப்படும் விருப்பு வாக்குகள் அமீர் அலிக்கு ஏறாவூரிலோ காத்தான்குடியிலோ ஏறக்குறைய அறவே கிடைக்கவில்லை. எனினும் அங்கு கட்சிக்குக் கிடைத்த வாக்குகளுடன் கல்குடாவில் அவருக்கு அளிக்கப்பட்ட அறுதிப் பெரும்பான்மை வாக்குகளாலும் வெற்றி பெற்றார்.
எனினும் அன்றைய நிலையுடன் தற்போதைய செல்வாக்கினை ஒப்பிம்போது அது படிப்படியாக குறைந்து சென்று இன்று அரைவாசிக்கும் குறைந்த மக்கள் ஆதரவே அவருக்கு உள்ளமை வெளிப்படையானது.
பின்னர் தன்னை ஊருக்கும் நாட்டுக்கும் அறிமுகப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரது தாய்க் கட்சியை விட்டும் வெளியேறி ரிஷாட் பதியுதீன் போன்றோருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) என்ற கட்சியை உருவாக்கி அதனூடாக அரசியல் தாவுதலை ஆரம்பித்தார்.
ஊர் அபிவிருத்தி என்று கனிசமான கொந்தராத்து வேலைத் திட்டங்களை அவர் செய்தபோதிலும் 2010 இல் இடம்பெற்ற 14 வது பாராளுமன்றத் தேர்தலில் அவரது பரம எதிரியான ஹிஸ்புல்லாவிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2012 இல் மாகாண சபை உறுப்பினரானார். மாகாண சபை உறுப்பினராவதற்கு அவ்வளவு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு படிப்படியாக இவரது செல்வாக்கு குறைந்து செல்வதை படித்த , அரசியல் அடிப்படை தெரிந்த எவரும் மறுப்பதற்கில்லை.
ஏன் இறுதியாக 2018 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவரது ACMC கட்சிக்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு 7 உறுப்பிர்கள் தெரிவாகிய அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் தெரிவாகினர்.
தற்போதைய நிலையில் கல்குடாவிலுள்ள மொத்த வாக்குகளில் அரைவாசி (1/2) எண்ணிக்கையிலும் குறைந்த வாக்காளர்களையே அமீர் அலி தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இது அவர் மேடைகளில் பேசித்திரிகின்ற ‘அபிவிருத்தி’ என்ற கொந்தராத்து மாயயை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலைமையினையும் கல்குடா மக்களை ஒற்றுமைப்படுத்த இயலாத அவரது கையறு நிலைமையினையும் காட்டிநிற்கிறது.
காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தக்கவைத்துக் கொண்டுள்ள வாக்காளர்களையும் (நகர சபையின் மொத்த ஆசனங்கள்), ஏறாவூரில் ஒரே கட்சியைச் சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அலிஸாஹிர் மௌலானா இருவரும் தக்கவைத்திருக்கும் வாக்குகளையும் நோக்கும்போது அவர்கள் தத்தமது பிரதேசங்களில் சுமார் 80-90% வீதமான வாக்குகளைப் பெறக்கூடிய நிலையிலும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் கணிசமான வாக்குகளையும் பெறக்கூடிய நிலையிலும் காணப்படுகின்ற அதேவேளை அமீர் அலியோ சொந்தத் தொகுதியிலேயே 40-50% வீதமான வாக்குகளையே பெறக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இது அவரது குறைந்து செல்லும் பலவீனமான ஆளுமையினை பறைசாற்றுகிறது.
அந்த வகையில் இலங்கை தேர்தல் வரலாற்றில் 100% ஒற்றுமையை உதாரணமாகக் காட்டிய கல்குடா முஸ்லிம்களையோ இளைஞர்களையோ யாரும் விரல் நீட்டிக் குற்றஞ்சாட்ட அருகதையில்லை. மாறாக ஒற்றுமையாயிருந்த அவர்களை SLMC என்றும் ACMC என்றும் இரு துருவங்களாக/இரு அணிகளாக பிரித்து வைத்திருக்கும் வக்கற்ற சுயநல அரசியல்வாதிகளே முழுக் காரணமாகும்.
எனினும் இவ்விரண்டு கட்சிகளிலுமுள்ளவர்களில் தீவிரமான சிலரைத்தவிர ஏனைய பெரும்பான்மையினர் நல்ல நோக்கத்திற்காகவும் சமூக நலனுக்காகவும் ஒன்றுபடக் கூடியவர்கள்.
இவர்களுக்கு இன்றைய நிலையில் சரியான வழிகாட்டல்கள் ஒருங்கிணைப்புக்கக்கள் வழங்கப்படுமாயின் கல்குடாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இதற்கான பொறுப்பும், கடமையும் தற்போது கல்குடா சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளின் கைகளில்தான் தங்கியுள்ளது.
கட்டுரையாளர் – கல்குடா ஜெமீல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s