இரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை ஈரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர்தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
ஈரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து பகிர்ந்த டிரம்ப், “பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக இரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். நாங்கள் 52 ஈரானிய இலக்குகளைக் குறி வைத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

1979ஆம் ஆண்டு இறுதியில் 52 அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக இரானில் ஓர் ஆண்டுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டப் பின் இந்த சம்பவமானது நடந்தது.
இதனைக் குறிக்கும் விதமாகதான் டிரம்ப் இவ்வாறு கூறி உள்ளார்.
1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அமெரிக்க தூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். அன்றிலிருந்து இருநாடுகளும் எதிரிகளாக இருந்து வருகின்றன. அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என இரான் சூளுரைத்துள்ளது.