அரசியல் கட்சிகள் தேர்தல் ஒன்றில் மாவட்ட மட்டத்தில் 12.5 வீதமான வாக்குகளை பெற்றால் மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவங்களை பெற முடியுமான வகையிலேயே அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த யோசனை பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன்   உயர்நீதிமன்ற  மற்றும் மேன்முறையீட்டு  நீதிமன்ற நீதியரசர்கள் நீதி சேவை ஆணைக்குழுவின்  ஆலோசனையுடன்  ஜனாதிபதியினால்  நியமிக்கப்படவேண்டுமென்றும்  சட்டமா அதிபர்  கணக்காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் மற்றும்   பாராளுமன்ற பொதுசெயலாளர் ஆகியோரை  பிரதமரின் ஆலோசனையுடன் ஜனாதிபதியே நியமிக்கவேண்டும், பாதுகாப்பு அமைச்சை   ஜனாதிபதியே வகிக்கவேண்டும் என்றவகையில்   அரசியலமைப்பில் 22  ஆவது திருத்த யோசனை   விஜயதாஸ  ராஜபக்ஷவினால்  கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு  பாராளுமன்ற  உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பில்  21 மற்றும்  22 ஆம் திருத்த யோசனைகள் நேற்றைய தினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றன.  

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ கொண்டுவந்திருக்கும்   21 ஆவது திருத்த யோசனையில்   அரசியல் கட்சியொன்று  மாவட்ட மட்டத்தில் பிரதிநிதிகளை  பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் அடிப்படை தகுதியாக 12.5  வீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற  ஏற்பாடு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதனூடாக   தற்போது  காணப்படுகின்ற 5 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற  நிலைக்கு  ஆபத்து ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.  

இதனால்   சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள்  பாதக விளைவுகளை  சந்திக்கும் அபாயம் உள்ளது. உதாரணமாக  சிறுபான்மை கட்சியொன்று ஒரு மாவட்டத்தில் தனித்து போட்டியிடுமாயின் கட்சியானது 12.5 வீதமான வாக்குகளைப் பெற்றால்  மட்டுமே பிரதிநிதித்துவங்களைப்பெற  தகுதி உடையதாக   காணப்படும்  என்ற வகையிலேயே    21ஆவது திருத்தயோசனை  அமைந்திருக்கிறது.

தற்போது  5 வீதமான வாக்குகளைப் பெற்றால் ஒரு அரசியல் கட்சியானது  ஒருமாவட்டத்தில்  பிரதிநிதிகளை பெறுவதற்கான தகுதியை  பெற்றுவிடும்.  அந்த  ஏற்பாட்டுக்க சவால் விடுக்கும் வகையிலேயே 21 ஆவது திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.  1988 ஆம் ஆண்டுவரை 12.5 வீத வாக்குகளை பெற்றாலே  பிரதிநிதிகளை பெற முடியும் என்ற  ஏற்பாடே காணப்பட்டது.  ஆனால் 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச   அந்த  சட்டத்தை மாற்றி  5 வீத வாக்குகளை பெற்றால்    பிரதிநிதித்துவங்களை பெற முடியும் என்ற ஏற்பாட்டை கொண்டுவந்தார்.

இதேவேளை  22 ஆவது திருத்த  சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பு பேரவையின்    அதிகாரங்கள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.  தற்போதைய 19 ஆவது திருத்த  சட்டத்தின்  பிரகாரம் அரசியலமைப்பு பேரவையே   உயர்நீதிமன்ற  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கின்றது. அத்துடன்  பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர்  பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்டோரும் அரசியலமைப்பு   பேரவையினால் நியமிக்கப்படுவதுடன்  சுயாதீன ஆணைக்குழுக்களும் பேரவையினால் நியமிக்கப்படுகின்றன.    

ஆனால் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்துள்ள  22 ஆம் திருத்த யோசனையின் பிரகாரம்   உயர் நீதிமன்றம்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதியசர்களை ஜனாதிபதியே நியமிக்கவேண்டும் என்றும்  அந்த நியமனத்தின்போது நீதி சேவை  ஆணைக்குழுவின்  ஆலோசனையைப் பெற முடியும் என்று   ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோன்று சட்டமா அதிபர்  பொலிஸ்மா அதிபர் கணக்காளர் நாயகம்  மற்றும்  பாராளுமன்ற பொது செயலாளர் ஆகியோரை  ஜனாதிபதியே நியமிக்கவேண்டும் என்றும்   அதன்போது   பிரதமர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற முடியும் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ கொண்டுவந்துள்ள 21 ஆவது  திருத்தயோசனையில்   குறிப்பிடப்பட்டிருக்கின்றது.