அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்

கல்முனை மாநகர சபையில் அரச சேவை உத்தியோகத்தர்களின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பொறியியலாளர் ரி.சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மிருக வைத்திய அதிகாரி வட்டப்பொல, சிரேஷ்ட உத்தியோகத்தர்களான எம்.எம்.ஜௌபர், எம்.எம்.இஸ்மாயில், புவனேந்திர ராஜா, குணரட்ணம், ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த தலைமை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் நாட்டுக்காக தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் உயிர்நீத்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையுரை நிகழ்த்துகையில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய வேலைத் திட்டங்கள், வெள்ள அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகள், திண்மக்கழிவகற்றல் சேவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பிறந்திருக்கும் புதிய ஆண்டில் மக்களுக்கான சேவைகளை இன்னும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் முன்னரை விட இன்னும் அதிகளவில் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கடந்த வருடம் தியாக மனப்பாங்குடன் தமது கடமைகளை வெகு சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்கள் பலர், மாநகர ஆணையாளரினால் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.