குறுச்செய்தியால் 31 இலட்சம் ரூபாவை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பம் !

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி பணியாற்றி வரும் நிலையில் தாயும் , மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள்.

அந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு , லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும்  ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது , சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள் , கார் ,  காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள புகைப்படங்களை  மின்னஞ்சல் ஊடாக மர்ம கும்பல் ஒன்று  அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் மர்ம கும்பலின் மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பி இவர்கள் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிழமை இடைவெளியின் பின்னர் , திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபா பணத்தினை அந்த மர்ம கும்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பணப் பரிசிலும் , காரும் இலங்கைக்கு வந்து விட்டது எனவும் அதனை பெற்றுக்கொள்ள கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் கறுத்த பெட்டி (சூட்கேஸ்) ஒன்றினை கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் , காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத்தொகை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் அத்துடன் , வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி குறித்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும்,  திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்களை தொடர்புகொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை. தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது , குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

அதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்து பார்த்த போது , உடைந்த கண்ணாடி போத்தல்கள் , பஞ்சு , நாணய தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. அதன் போதே அவர்கள் தாம் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார்கள்.

குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம் , நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன் , ஊரில் வட்டிக்கு பெரும் தொகை பணத்தினையும் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் எனவும் , அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s