இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.
தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் இதனை கூறினார்.
தேசிய கீதம் இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
இந்தியாவிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை அவர் இதன்போது நினைவூட்டினார்.