அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தரம்-11 வரையான மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடாத்தும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் டிசம்பர் 15 தொடக்கம் 31 ஆம் திகதி வரை மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று திங்கட்கிழமையும் (02) இன்று செவ்வாய்க்கிழமையும் (03) கல்முனையில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடன் இரு கட்டங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஓய்வு, சுற்றுலாப் பயணங்கள், வெள்ள அனர்த்த அபாயம் மற்றும் டெங்கு பரவல் உள்ளிட்ட பல விடயங்களை கவனத்தில் கொண்டு டிசம்பர் 15-31 காலப்பகுதியில் மேற்படி தனியார் கல்வி நிலையங்களை மூடி, மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதன் மூலம் அவர்களது நலன்களையும் பாதுகாப்பையும் பேண முடியும் என்று மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது முன்வைத்த யோசனைக்கு தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அத்துடன் பொலிஸ் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்ததுடன் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

மாணவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பாக சுற்றுச்சூழல் சுத்தம், டெங்கு அற்ற சூழல் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இவ்விடயங்கள் உள்ளிட்ட ஒழுங்கு விதிகளை பின்பற்றாத கல்வி நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதுடன் பொலிஸ் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இவற்றைக் கண்காணிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களை உள்ளடக்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டது. வருடத்தில் நான்கு முறையாவது அனைத்து கல்வி நிலையங்களும் இக்குழுவினரால் பரிசோதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே.எம்.நிஸ்தார், ஏ.எல்.எம்.ஜெரீன், ஏ.எம்.பாறூக் உட்பட மாநகர சபையின் வருமான பரிசோதகர்களும் பங்கேற்றிருந்தனர்.  

அதேவேளை தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஜீ.சி.ஈ.உயர்தர வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் வழமைபோல் இயங்குவதற்குவதற்கு மேற்படி தீர்மானம் தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.