இலங்கை முஸ்லிம்களை பேசுபொருளாக்கிக் கொண்டே பௌத்த பேரினவாதிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை பெற்றுக் கொள்ளக் கூடியதொரு சூழல் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களும், தமிழர்களும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பதனை அனுமதிக்க முடியாது. அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கி விட்டு, அரசாங்கத்தை அடிபணிய வைத்து, பேரம் பேசி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், நாட்டிற்கு பாரிய ஆபத்து என்பன போன்ற கருத்துக்களை பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் கொண்டுள்ளார்கள்.
நாட்டில் எல்லா இனங்களிலும் போதைவஸ்து கடத்தல் காரர்கள், பாதாள கோஷ்டியினர் போன்ற பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் மதம், மொழி, இனம் என்பதனைக் கடந்தவர்கள். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மேற்படி வேறுபாடுகளைக் கடந்த ஒரு குழுவினர் என்றே அடையாளப்படுத்த வேண்டும். ஆயினும், முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்படி குற்றச்சாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள் என்று பிரசாரங்களை பௌத்த கடும்போக்குவாதிகள் மேற்கொள்கிறார்கள்.
ஆனால், மேற்படி பாரிய குற்றச்செயல்களைச் செய்கின்றவர்களின் தலைவர்களாக சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களினால் நாட்டின் பொருளாதாரம் பாழாக்கப்படுகின்றது என்று தெரிவித்து, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் நடவடிக்கைகளையும் பௌத்த கடும்போக்காளர்கள் மேற்கொண்டார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பலவற்றை எரித்தார்கள், முஸ்லிம் கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாதென்றும் கட்டளையிட்டார்கள்.
இவ்வாறு முஸ்லிம்களின் அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றிக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்கள் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பெரும்பான்மை மக்களிடையே அதற்கு எதிராக விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே பேசினார்கள். அதனால், முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பேரினவாத மக்களிடையே ஒரு அங்கீகாரம் இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு பிரதான காரணிகளை அடையாளம் காணலாம். முதலாவது முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் நாட்டிற்கும், பௌத்தத்திற்கும் எதிரானவர்கள் என்ற பிரசாரம் வெற்றியளித்துள்ளமை. இரண்டாவது பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் பின்னால் இருந்த அரசியல் பலம்.
பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் இவ்வாறு செயற்பட்டமைக்கு ஒரு அரசியல் தேவை இருந்தது. அந்த தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற கருத்தை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை முன் வைக்கும் பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கே ஆதரவு வழங்கியது. ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றதும், பொதுபல சேனாவை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கலைக்க இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளமையால், இனிமேல் தேசத்தை பாதுகாக்க தேசிய அமைப்புக்கள் தேவையில்லை எனத் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த அமைப்புக்களின் மேற்படி கருத்துக்களின் மூலமாக அவர்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் பின்னால் ஒரு அரசியல் தேவை இருந்தமையை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் முன் வைத்த எந்தக் கருத்துக்களிலும் உண்மை இருக்கவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் அரசாங்கத்தை அமைப்பதற்கு பேரம் பேசி, அரசாங்கத்தை அடிமைப்படுத்தி தங்கள் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். காலத்திற்கு காலம் மாறும் ஆட்சியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் பதவிகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், சமூகம் சார்ந்த எந்த பேரத்தை பேசி தீர்வு கண்டுள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற இடங்களிலும் உள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கரையோர மாவட்டக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இக்கோரிக்கை பற்றி முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவடையவில்லை. அரச உயர் பதவிகளில் முஸ்லிம்களுக்குரிய பங்கீடுகள் வழங்கப்படவில்லை. இவைகளை கேட்டு பெற்றுக் கொள்ளும் நிலையிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களில்லை. இவ்வாறு சமூகம் சார்ந்த எந்தப் பிரச்சினைகளையும் முஸ்லிம் சமூகத்திற்கு தீர்க்காதவர்களாகவே தலைவர்கள் உள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிராகவுள்ள தேர்தல் திருத்தச் சட்டம், 18ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றிக்கு ஆதரவு அளித்து பேரினவாத சமூகத்தின் நலன்களை மேலும் விரிவுபடுத்தும் சட்ட ஏற்பாடுகளுக்கே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் துணையாக செயற்பட்டுள்ளார்கள்.
இப்படியாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரம் பேசி அரசாங்கத்தை அடிய பணிய வைத்து சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற பௌத்த கடும்போக்காளர்களின் குற்றச்சாட்டு உண்மையற்றது. அந்தக் குற்றச்சாட்டு அரசியல் தேவைக்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க எடுத்த பெரும் முயற்சி என்றே கூறலாம். இது போலவே, பௌத்த கடும்போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைத்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
முஸ்லிம்களினால் பௌத்த மதம் மற்றும் கலாசாரத்திற்கு ஆபத்து என்பது கூட ஒரு அபத்தமான குற்றச்சாட்டாகும். இந்தியாவில் இந்து மதத்திற்கு ஆபத்து என்று பி.ஜே.பி ஆதரவு இந்துவாத அமைப்புக்கள் அரசியல் தேவைக்காக முன் வைத்த, அதே பாணியிலேயே இலங்கையில் பௌத்தத்திற்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டும், அதன் பின்னணியும் உள்ளது.
2009ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டின் பாதுகாப்புக்கும், ஐக்கியத்திற்கும் தமிழர்களினாலும், அவர்களின் ஆயுதக் குழுக்களினாலும் ஆபத்து. நாட்டை பாதுகாத்துக் கொள்ள சிறந்த தலைவர் வேண்டுமென்றும், இனங்களுக்கு இடையே ஐக்கியத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்றும் பேரினவாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இந்த மூல மந்திரத்தை சிங்கள மக்களிடையே ஆர்.பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷவும் உச்சரித்தே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோல்வியடைந்ததன் பின்னர், பேரினவாத அரசியல் தலைமைகள் மற்றும் கட்சிகள் தமது தேர்தல் வியூகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதனை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. யுத்த வெற்றியின் மமதையில் பௌத்த கடும்போக்காளர்களும், பேரினவாத அரசியல்வாதிகள் பலரும் பௌத்த சிங்கள மக்களின் தனிப் பெரும் வாக்குகளினால் ஆட்சி அமைப்பதற்குரிய செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்த வெற்றியே தேர்தல் பிரசாரத்திற்காக மூலக்கருவாகக் கொள்ளப்பட்டது. இந்த தேர்தலில் முஸ்லிம்களும் பெருமளவில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்களித்தார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் தான் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை வேண்டி நின்றார். முஸ்லிம் கட்சிகளும் அதற்கு பச்சைக்கொடி காட்டி கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொண்டன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி போன்ற ஒரு சிலரும், முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையினரும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிரான முடிவுகளை எடுத்துக் கொண்டனர்.
இதனால், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றியடைச் செய்தார்கள். ஆட்சி மாற்றம் முஸ்லிம்களுக்கு விடிவினைத் தரும் என்று நம்பிய போதிலும், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி, முஸ்லிம்களை பொறுத்தவரை மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை விடவும் இருண்டதொன்றாகவே இருந்தது என்பது உண்மையாகும். இந்த ஆட்சியில் இனவாதிகளினால் முஸ்லிம்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள்.
இதனிடையே 2019 ஏப்ரல் 21இல் முஸ்லிம்களில் ஒரு குழுவினர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
இதில் சுமார் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மதவிழுமியங்கள், கலாசாரம் ஆகியவற்றில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியது. பௌத்த கடும்போக்காளர்களின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் ஒன்றாகவே இத்தாக்குதல் அமைந்தது. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. பல இடங்களில் முஸ்லிம் தாக்கப்பட்டார்கள்.
இந்த நிலைமைகள் நடந்தேறிக் கொண்ருரந்த சூழலில்தான் 2019இற்குரிய ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிப்பது என்பதில் முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கேள்விகள் இருந்தன. இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபயவும், முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகன் சஜித்தும் வெற்றிக்கான வாய்ப்பைக் கொண்ட வேட்பாளர்களாக போட்டியிட்டார்கள்.
இந்த தேர்தலில் முஸ்லிம்கள் பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தங்களிடையே காணப்படும் அச்சத்தை வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால், கோத்தாபய வெற்றி பெற்றால் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினதும், அரசியல்வாதிகளினதும் கைகள் மேலும் பலமடைந்து, தங்களின் மீது மேலும் எதிர் நடவடிக்கைளை மேற்கொள்வார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதனை தவறு என்றும் கணிக்க முடியாது. கடந்த கால நடவடிக்கைகள், பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவது, பௌத்த கடும்போக்காளர்கள் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முஸ்லிம்களிடையே காணப்பட்ட அச்சத்தையும், பீதியையும் மேலும் அதிகரிக்கச் செய்தது. இதனால், முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படும் என்று நம்பினார்கள். இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சஜித்திற்கு ஆதருவு வழங்கவும் தீர்மானித்துக் கொண்டன.
2015ஆம் ஆண்டு சிறுபான்மையினரின் அதிகபட்ச வாக்குகளினால்தான் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி அடைந்தார் என்ற அனுபவம் பொதுஜன பெரமுனவுக்கு இருந்தது. இதனால், சிங்கள மக்களின் அதிக பட்ச வாக்குகளையும், சிறுபான்மையினரின் மிகக் குறைந்த பட்ச வாக்குகளையும் பெற்றுக் கொள்ளும் போதுதான் வெற்றி வாய்ப்பை அடையலாமென்று முடிவு செய்யப்பட்;டது. இதற்கு அமைவாக கோத்தாபயவின் தேர்தல் வியூகம் அமைந்திருந்தது. விகாரைகளை மையப்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டினதும், பௌத்த மதத்தினதும் பாதுகாப்பு குறித்துப் பேசியே கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றார்.
இந்தப் பின்னணிகளுக்கு மத்தியில் கோத்தபாய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். புதிய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், முஸ்லிம் ஒருவர் கூட அமைச்சர் பதவிகளில் நியமிக்கப்படவில்லை. இதனால், புதிய ஜனாதிபதி குறித்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கோத்தாபய ராஜபக் ஷவுக்கு தமிழர்களில் சுமார் 90 வீதமானவர்கள் வாக்களிக்கவில்லை. இதற்கும் தமிழர்கள் மத்தியில் உள்ள அச்சமே காரணமாகும். ஆயினும், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களில் பைஸர் முஸ்தபா, மஸ்தான் ஆகியோர்கள் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கிய போதிலும், அவர்களில் ஒருவருக்கேனும் அமைச்சர் பதவி வழங்கவில்லை. சிறுபான்மையினரின் ஆதரவு பெருமளவுக்கு கிடைக்காமைக்கு அவர்களிடையே காணப்படும் அச்சம்தான் காரணம் என்பது தெளிவான ஒன்றாகும். இந்த அச்சத்தை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் பொறுப்பாகும். அதனைச் செய்வதற்கு முதற்படியாக முஸ்லிம்களில் ஒருவரை அமைச்சராக நியமித்து இருக்கலாம். இதனால், முஸ்லிம்கிடையே காணப்பட்ட அச்சம் நியாயமானதுதான் என்று எண்ண வேண்டியுள்ளது.
அதே வேளை, முஸ்லிம்களிடையே காணப்படும் அச்சத்தை அமைச்சர் பதவிகளின் மூலமாகத்தான் இல்லாமல் செய்ய வேண்டுமென்பதல்ல. முஸ்லிம்களிடையே பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகளே காரணமாகும். இந்த அச்சத்தை நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டும் போது கூட இல்லாமல் செய்யலாம். ஆயினும், ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்று சர்வதேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் காட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமித்திருக்க வேண்டும்.
முஸ்லிம் ஒருவரை எந்தவொரு அமைச்சர் பதவிக்கும் நியமிக்காது இருப்பதனை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் பிரமுகர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பதனையும் காண்கின்றோம். அதாவது, கோத்தாபயவுக்கு முஸ்லிம்களில் எத்தனை சதவீதத்தினர் வாக்களித்தார்கள் என்று கேட்கின்றார்கள். இந்தக் கேள்வி கோத்தாபயவுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் பிரமுகர்களுக்குக் கூட எதிர்காலத்தில் ஆபத்தாக அமையலாம். பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற வேண்டுமாயின் தங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள பெரும்பான்மையினரால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி என்ற வெற்றிக் கோசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அமைச்சர் பதவிகளில் முஸ்லிம் ஒருவரையேனும் அமைச்சராக நியமிக்காது இருப்பதற்கு காரணமாகும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அதனால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தமது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரையேனும் அமைச்சராக நியமிக்காது இருப்பது பொதுத் தேர்தலை மையப்படுத்தியது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இந்த முடிவு பாராளுமன்ற தேர்தலின் பின்னரும் தொடருமாக இருந்தால், அதுவே முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். அதே வேளை, முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவியை கொடுக்கும் போது அதனை பௌத்த கடும்போக்காளர்கள் எதிர்க்கவும் கூடும். வடமேல் மாகாண சபையின் ஆளுநராக முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அடிபணியமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– சஹாப்தீன்