ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பதற்கு சஜித் பிரேமதாச மிகப் பொறுத்தமானவராவார். அவரின் தலைமைத்துவத்தை விரும்பி வாக்களித்த 55 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகவே இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க இதனை புரிந்து கொள்வார் என்று நம்புவதோடு, அவரது ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்த மக்கள், ஆதரவாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் மிக்கதாகவும், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிக்கின்ற தேர்தலாகவும் அமைந்திருந்தது. அந்த தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தை அவருக்கு வாக்களித்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.