ராஜபக்ஷ குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என நம்புவதாக முற்போக்கு தமிழர் அமைப்பின் அம்பாறை, கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் பொறுப்பாளரும் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவருமாகிய கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையின் 7 வது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வினையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டும் கல்முனை நகரின் பிரதான வீதியால் செல்வோருக்கு தாக சாந்திகள் மற்றும் இனிப்பு பண்டங்களை ஐக்கிய தமிழர் முற்போக்கு கூட்டணியின் கல்முனை பிராந்திய அமைப்பாளர்களால் வழங்கி வைக்கப்பட்ட பின்னர் நேற்றுமுன்தினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கின் அபிவிருத்தியில் எதிர்காலத்தில் எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பாரிய பங்காற்றுவார். எதிர்காலத்தில் கிழக்கில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீட்டின் மீது என் தலைமையில் குழு ஒன்று சென்று வாள்களை காட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக செய்தி ஒன்று பரப்பப்படுகிறது. இதை முற்றாக நான் மறுக்கின்றேன்.

ஜனநாயக ரீதியாக எனது செயற்பாடுகளை முன்னெடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை நிச்சயித்துள்ளோம்.இதை தாங்கி கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.