
1985ம் ஆண்டு காத்தான்குடியின் முன்னணி கழகமான யுனைடட் விளையாட்டுக்கழகத்திற்கும் அக்கரைப்பற்று யூத் விளையாட்டுக்கழகத்திற்குமிடையில் சிநேகபூர்வ உதைப்பந்தாட்டப்போட்டி சனத்திரளால் நிறைந்திருந்த காத்தன்குடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை வேளையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
யுனைடட் அணியினதும் காத்தான்குடியினதும் புகழ்பெற்றிருந்த யுனைடட் அணியின் கோல்காப்பாளர் மசூத் அவர்களை மிஞ்சும் அளவுக்கு இளைஞன் ஒருவன் அக்கரைப்பற்று யூத் அணியின் கோல் கம்பத்தில் யுனைடட் அணியின் வெட்டுப்பிளையர் ஹனீபா மற்றும் வசீர்தீன் ஆகியோரின் உதைகளை லாவகமாகத் தடுத்துக்கொண்டிருந்தார். காத்தான்குடி உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு அவரது கோல் தடுப்பு முறைகளும் அவரது திறமையும் பிடித்துப்போனது.
அவர்தான் மர்ஹூம் பாரூக் நானா.
போட்டி நிறைவில் 2:2 சமநிலையில் இரு அணி வீரர்களும் ஆரத்தழுவிக்கொள்ள மஹ்ரிப் பாங்கும் ஒலித்தது.
உதைப்பதாட்டம் மூலமான நட்பில் அவ்வப்போது காத்தான்குடிக்கு வந்து செல்லும் பாரூக் நானா, அக்கரைப்பற்றில் வியாபாரம் புரியும் காத்தான்குடி குடும்பம் ஒன்றினூடாக 1986 காலப்பகுதியில் காத்தான்குடியில் கால் பதிக்கிறார்.
ஓர் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வாலிபப் பருவத்தில் காத்தான்குடியை வலம் வரும் பாரூக் நானா
காத்தான்குடி 5ம் குறிச்சிப் பகுதியில் பல வருடங்கள் வசித்து வந்தார்.
அப்பகுதி மக்கள் மிகுந்த மரியாதை கொடுத்து வந்தார்கள்.
எப்போதும் அவரைச் சுற்றி ஓர் இளைஞர் அணி சூழ்ந்திருக்கும்.
புன்னகை மாறா முகபாவனையுடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பு அவருக்கு என்றுமே சொந்தமானதொன்றாக இருக்கும்.
ஜாமியா நளீமிய்யாவில் கல்விகற்க வாய்ப்புக்கிடைத்த போதிலும் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பை இழந்தார்.
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தில் 1990களின் ஆரம்ப காலத்தில் இணைந்த பாரூக் நானா , அவ்வணியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
மூன்று மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அவர் ஆங்கில இலக்கணத்தில் ஓர் தனிக்கலையைக் கற்றிருந்தார்.

நூற்றுக்கணக்கான மாணவர்களையும், இளைஞர்களையும் ஆங்கில அறிவைப் போதித்து நல்ல நிலைமைக்கு அவர்களைக் கொண்டுசெல்ல அதிகம் பாடுபட்டார்.
1990 காலப்பகுதியில் காத்தான்குடி 5, கிளினிக் ஒழுங்கையில் வசித்திருந்த அவர், யுத்தசூழலில் மாலை 6 மணிக்கு மேல் நடமாட்டமில்லாத அந்நேரத்தில் தன்னைத் தேடிவரும் மாணவர்களுக்கு அயராது ஆங்கிலத்தைப் போதித்து வந்தார்.
அப்போதைய காலகட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள், ஏனைய பிரதான நிகழ்வுகளை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மும்மொழியிலும் அறிவிப்புச் செய்து தனது அறிவிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
காத்தான்குடியில் யுனைடட் அணி விளையாடும் கிரிக்கட் போட்டிகளுக்கு ஆங்கில வர்ணணையை செவ்வனே செய்தும் காட்டினார்.
இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், இலங்கை உதைப்பந்தாட்ட நடுவர் சங்க உறுப்பினரும், காத்தான்குடி லீக் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான என்.ரி.பாறூக் அவர்கள் எங்களைவிட்டும் பிரிந்துவிட்டார்கள். அவர்களின் ஜனாஸா அக்கரைப்பற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிகமான காத்தான்குடி மக்கள் அவரது இவ்வுலக இறுதிப்பயணத்தில் கலந்துகொள்வதற்கு சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில்…
யா அல்லாஹ் அன்னாரை நீ பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தையும் வழங்கிவிடு!
- முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்