நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் 113 ஐ பெறும் தரப்பினர் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக பாராளுமன்றத்தில் 113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினமும் நேற்று முன்தினம் மாலையும் ஐக்கிய தேசிய கட்சியின் பல எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ஷ இன்றைய தினம் நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமானம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அடுத்த பாராளுமன்ற அமர்வின்போதே மஹிந்த தரப்பினர் புதிய அரசாங்கத்தின் பெரும்பாமையை வெளிக்காட்ட முயற்சிப்பதன் விளைவாகவே இவ்வாறு 113 என்ற பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். இதேவேளை நேற்றைய தினம் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பி பெரேராவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததாகவும் அறிவித்திருக்கிறார்.
இதேவேளை இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் பிரதமரும் பதவியேற்பதே சம்பிரதாயம். எனவே அமைச்சர் தற்போது பதவி விலகுவது நகைச்சுவை என்று தெரிவித்திருக்கின்றார்.
அந்தவகையில் எதிர்வரும் சில தினங்களில் பாரிய கட்சித்தாவல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுதந்திரக்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எவ்வாறான முடிவை எடுப்பார் என்பது தொடர்பில் இதுவரை தெளிவற்றத்தன்மையே காணப்படுகின்றது.