வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் உட்பட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பாதுகாப்பு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2019) காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாகவும், அனைத்து இடங்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிலையில் தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த பணிகளில் 60 ஆயிரத்து 175 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நேற்று காலை 6.00 மணிக்கு கடமைகளை ஆரம்பித்தனர்.
அவ்வந்த பகுதிகளுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் திட்டங்களுக்கு அமைய அவர்கள் அவசியமான இடங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களுடன் உதவியாக 8080 சிவில் பாதுகாப்பு படையினரும் கடமைகளை ஆரம்பித்துள்ள நிலையில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நாடளாவிய ரீதியில் தனியான பாதுகாப்பு திட்டம் வகுத்து நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.
இதனிடையே இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில், ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான சட்டத்தின் 68 ஆவது அத்தியாயத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய விஷேட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களை சுற்றியுள்ள 500 மீற்றருக்குள் வாக்கு கேட்பது, வேட்பாளர் ஒருவருக்கு வக்களிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுப்பது, வாக்களிக்க வருவோருக்கு இடையூறு ஏற்படுத்துவது, வாக்ககளிப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுவோருக்கு இடையூறு விளைவிப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அதன்படி அவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர எச்சரித்தார்.
இதேவேளை வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கும் நிலையில், வாக்களிக்க செல்வோர் தமது கையடக்கத் தொலைபேசிகளை டுத்துச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வாறு தொலைபேசிகளை கொண்டு செல்வதானால், அங்கு சென்றதும் தமது வக்குச் சீட்டுக்களை அதனூடாக புகைப்படமெடுக்க முயன்றால், அதன்போது கைது செய்யப்படலாம் எனவும், வாக்களிப்பு நிலையத்துக்குள் தொலைபேசி செயற்பட்டால் அது தேர்தல் கடமையில் உள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கருதி கைதுவரை தாக்கம் செலுத்தலாம் என்பதாலும் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.