இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப் பதிவுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த பணிகளில் 60 ஆயிரத்து 175 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் நேற்று, குறித்த பகுதிகளுக்கு கடமைக்காக சென்றுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
60175 பொலிஸாருக்கு மேலதிகமாக 3500 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேரடியாகவே பாதுகாப்பு உள்ளிட்ட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், எண்ணாயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம், வாக்கெண்ணும் பணிகளில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதனைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் வாக்களிப்பு நிலைய பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலன்புரி மற்றும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.