முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது 

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்களிப்பதற்கு மக்கள் தயாராக உள்ள நிலையில் ஏற்கனவே பலதரப்பில் இருந்தும் கருத்துக்க கணிப்புகள் வெளிவந்ததுள்ளன. வாக்களிக்கின்ற மக்களின் மனோநிலையானது இறுதி நேரத்தில் மாற்றமடைய வாய்ப்புகள் இருக்கின்றது. இது அனைத்து கருத்துக் கணிப்புக்களையும் தவிடுபொடியாக்கிவிடும்.

இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது பெரும்பான்மை இனத்தவர்களா ? அல்லது சிறுபான்மை இனத்தவர்களா ? என்பது நாளை தெரிந்துவிடும். 

ஏனெனில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மக்கள் எந்த பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லாமல் அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு செல்வது வழமையாகும். 

ஆனால் சிறுபான்மை சமூகத்தில் முஸ்லிம் மக்களில் பணக்கார குடும்பம் மற்றும் உயர்பதவிகள் வகிக்கின்ற குடும்பங்களை சேர்ந்த பெண்கள் வாக்களிக்க செல்வதில்லை. 

அதுபோல் நீண்டகால ஈழ யுத்தத்தில் விரக்திநிலை அடைந்துள்ள தமிழ் மக்களும், விடுதலை போராட்டத்தை அதிகம் நேசித்தவர்களும் “எந்த சிங்களவர் வந்தால்தான் நமெக்கென்ன” என்ற மனோநிலையில் வாக்களிப்பதில் ஆர்வம் காண்பிப்பதில்லை.    

இவ்வாறான அலட்சியப்போக்கு இருக்கும் வரைக்கும் சிறுபான்மை மக்களின் பலத்தினால் ஜனாதிபதியை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதோடு சிறுபான்மை மக்களின் வாக்குப்பலம் பெறுமதியற்றதாகிவிடும்.  

இந்த தேர்தலில் சிறுபான்மை மக்களில் பெரும்பாலானவர்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பது ரகசியமல்ல. இந்த நிலையில் சிறுபான்மை மக்களில் குறிப்பிட்ட வர்க்கத்தினர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது சிறுபான்மை இனத்தின் அரசியல் பலயீனத்தை காண்பிக்கும்.

எனவே சிறுபான்மை மக்கள் விரும்புகின்ற வேட்பாளரை வெற்றிபெற செய்வதற்காக உழைத்தவர்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பவர்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

அதாவது சிறுபான்மை இனத்தவர்களின் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்க செய்வதன் மூலம்தான் சிறுபான்மை மக்கள் விரும்புகின்ற வேட்பாளரை வெற்றிபெற செய்ய முடியும். இல்லாவிட்டால் பெரும்பான்மை சிங்கள மக்களில் அதிகமாணவர்கள் விரும்புகின்ற வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். இதனை உரியவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.