நான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய போது மொஹம்மட் சஹ்ரானை அறிந்திருந்தேன். அப்போது அவர் ஒரு மத போதகராக அல்லது விமர்சகராகவே கருதப்பட்டார். எனினும் அப்போதும் கூட காத்தான்குடி பகுதியில் உள்ள அனைத்து சாதாரண முஸ்லிம்களும் சஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்தனர் என குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும், 21/4 தககுதல்கள் இடம்பெறும் போது கொழும்பு மத்திய பொலிஸ் வலயத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராகவும் இருந்த உபாலி ஜயசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் இன்று (8) சாட்சியமளித்தார்.

உலகளவில் இஸ்லாத்தில் பிரதான இரு பிரிவுகளாக சுன்னி, ஷி ஆ பிரிவுகள் அடையாளப்படுத்தப்படுகினறன. எனினும் காத்தான்குடியில் அப்போது சுமார் 27 முஸ்லிம் உப பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்றுக்கே சஹ்ரான் தலைவனாக இருந்தார்.
சஹ்ரானின் நடவடிக்கைகள் அல்லது நிலைப்பாடுகள் சாதாரண முஸ்லிம்களை பாதித்ததால் அவர்களிடையே மோதல்களும் பதிவாகியிருந்தன. அதன் பின்னணியிலேயே சாதாரண முஸ்லிம்கள் சஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்ததாவும் அவர் சுட்டிக்காட்டினார்.
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று 5 ஆவது நாளாக நடைபெற்றது.
இந் நிலையில் 4 ஆவது சாட்சியாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க சாட்சியளித்தார்.
இதன்போதே அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கும் ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த வண்ணம் அவர் இந்த சாட்சியத்தை பதிவு செய்தார்.