ஹிஸ்புல்லாஹ்வுக்கு முதலாவது வாக்கை வழங்கி இரண்டாவது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குக

ஆர்.எஸ்.மஹி

கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமூகத்தின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு – ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பிலும் பேச்சு நடத்திய போதிலும் அவர்கள் தமது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், முஸ்லிம் சமூகம் தமது இரண்டாவது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குமாறு – தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் மையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா நேற்று புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பிரதான இரண்டு வேட்பாளர்களுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் மையம் என்ற சுயாதீன குழு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எந்த கட்சியையும் சாராது இம்முறை சுயாதீன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவர் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்கின்ற ‘நமது கனவு’ என்கின்ற ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார். அவரது ஒட்டகச்சின்னத்துக்கு முதலாவது விருப்பு வாக்கினை வழங்குங்கள் என்று அவர் கூறுவதன் மூலம் இந்த ‘நமது கனவு’ என்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கான மக்கள் ஆணையினை அவர் கோருகின்றார். இது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இவை தான் என்பதை பதிவு செய்கின்ற – ஆவணப்படுத்துகின்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலாக அமைந்துள்ளது.
முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகிவந்திருந்தது. ஆட்சியில் இருந்த பிரதான இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அதனால் இம்முறை இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முன்னணி முஸ்லிம் கட்சி தலைவர்களில் ஒருவர் போட்டியிடவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.
என்றாலும் 2010க்கு பின்னர் இதுவரை இடம்பெற்ற எந்த ஜனாதிபதி தேர்தலிலும் முஸ்லிம் தலைமைகள் நிபந்தனையற்ற ஆதரவையே பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வழங்கி வருகின்றனர். அதற்காக முஸ்லிம் சமூகத்தை அவர்களின் சுயநல அரசியலுக்காக பயன்டுத்தி வந்திருக்கின்றனர். அந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கத்திலே முஸ்லிம் சமூகம் சார்ப்பாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை போட்டியிடவைத்து அதற்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை தயாரித்தோம்.
எமது கனவு எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதனை பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கையளித்து, அவர்களின் யார் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றாறோ அந்த வேட்பாளருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் செயலாளராக செயற்படும் திஸ்ஸ அத்தநாயக்க, கோத்தாபய ராஜபக்~வின் செயலாளர் சாகல காரியவசம் ஆகியோருக்கு கையளித்து கலந்துரையாடினோம்.


இரண்டு வேட்பாளர்களின் செயலாளர்களும் எமது தேரதல் விஞ்ஞாபனம் தொடர்பாக பரிசீலித்துப்பார்த்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர். என்றாலும் இதுவரை அவர்களில் யாரும் எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை. அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஆதரவளித்து, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு முதலாவது விருப்பு வாக்கை வழங்கவேண்டும் என்பதுடன் எந்த வேட்பாளரினால் சமூகத்துக்கு நன்மை கிட்டும் என சுயாதீனமான சிந்தித்து இரண்டாவது தெரிவை வழங்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.


அத்துடன் எந்த வேட்பாளருக்கு முஸ்லிம் சமூகம் தனது இரண்டாவது தெரிவை வழங்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இனிஒருபோதும் அறிவிக்கமாட்டார் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s