கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு தற்போது சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.இம் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இம்மாநாட்டில் சுதந்திர கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளது.குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மிகவும் தான்தோன்றித்தனமான முறையில் கட்சியின் யாப்பையும் விதிமுறைகளையும் மீறி பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளதுடன் அதன் வேட்பாளருக்கு ஆதரவும் வழங்கியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.