கொழும்பு: தெஹிவளை பகுதியில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 100 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் (02.11.2019) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 17 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. போலீஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து, நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் ஊடாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து கேரளா கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

பேஸ்புக் விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்வதற்காக அம்பலங்கொடை, களுத்துறை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளிலிருந்து இந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

18 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்களே சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைளத்தங்களில் நட்புறவை பேணும் நண்பர்கள் இணைந்து இலங்கையில் கடந்த காலங்களில் பேஸ்புக் விருந்துபசாரத்தை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக் விருந்துபசாரம் என்ற பெயரில், போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்படும் பேஸ்புக் விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பயன்பாடு காணப்படுகின்ற நிலையிலேயே, போலீஸார் இந்த விருந்துபசாரத்தில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில வருட காலமாக பேஸ்புக் விருந்துபசாரம் இலங்கையில் அதிகரித்து வருகின்றது.