தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக ஏழு மணித்தியாலய கலந்துரையாடலின் பின்னர் முடிவெட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 10மணியிலிருந்து மாலை வரை இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும், பாரளுமன்ற குழு, கூட்டங்களிலும் இது பற்றி ஆராயபட்டிருந்தது.
இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ செயற்குழு இன்றையதினம் எடுத்திருந்தாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவில் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம்.
மற்றைய இரண்டு கட்சித்தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் தான் எமது கருத்துக்கள் இருந்தது. அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.
எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமை சாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களிற்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே மக்களுடைய கருத்தையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுவது அல்ல நிதானத்தை தற்போது இருக்கும்
அரசியல் சூழ்நிலையிலே தமிழ்மக்கள் சார்பாக ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுவார்த்தை நடாத்துகிறோம். அந்தக்கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் மக்களிற்கு ஒரு வழி காட்டுதல் கொடுக்கவேண்டிய அத்தியவசியகடப்பாடு இருக்கிறது அதை நாங்கள் செய்வோம் என மேலும் தெரிவித்தார்.