ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

– ஆர்.எஸ்.மஹி

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுகள் குறித்தும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைப்பு, முஸ்லிம் சமூக விவகாரங்கள், கல்வி, காணி – நிர்வாக பிரச்சினைகள் உள்ளிட்ட பல தலைப்புக்களில் சமூகப் பிரச்சினைகள் அதில் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கெதிரான கலவரங்களை தடை செய்யவும், வெறுப்பூட்டும் பேச்சைத் தடைசெய்யவும் (Prevention Of Riots Act & Prevention Of Hate Speech Act) நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறுவுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஆணைக்குழுவொன்றை அமைத்தல் மற்றும் சகல சமூகங்களையும் உள்ளடக்கி பிரதேச ரீதியில் சிவில் பொலிஸ் அமைப்பை உருவாக்கல் போன்றன தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு விடயத்தில் முக்கிய யோசனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், மாவட்ட ரீதியில் விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையங்களை உருவாக்குவதுடன் முதலாவதாக அம்பாறை மாவட்டத்தில் அதனை நிறுவி விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழிற் பயிற்சிகளை வழங்குதல், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி, தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சி அபிவிருத்தி மையங்களை உருவாக்குதல், நீர் வளங்களை மேம்படுத்துவதற்காக விசேட பொருளாதார செயற்குழுவை அமைத்தல், மீன்பிடித்துறையை முன்னேற்ற ஒலுவில், வாழைச்சேனை துறைமுகங்களை வலுவூட்டி, சர்வதேச முதலீட்டாளர்களின் உதவியுடன் குறித்த பிரதேச இளைஞர்களுக்கு கடல்சார் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், மன்னார் மற்றும் திருகோணமலையில் கடல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி வலயங்களை அமைத்தல், திருகோணமலை துறைமுகம் நவீன மயப்படுத்தப்பட்டு கப்பல் கட்டும் தொழில் உட்பட பாரிய தொழிற்சாலைகளை நிறுவி தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல் போன்ற யோசனைகள் நிலையான அபிவிருத்திக்கான பொருளாதார திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.


முஸ்லிம் சமூக, விவகாரங்கள் தொடர்பான யோசனைகளில் அரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும் பொறுப்புக் கூறும் வகையில் சட்ட ரீதியாக முஸ்லிம் சமய அலுவல்கள் விவகார அமைச்சினையும், திணைக்களத்தினையும் மீளக்கட்டியெழுப்புதல், சமூக பிரச்சினைகள் – சவால்களுக்கு உடனடித் தீர்மானங்களை எடுக்கும் வகையில் சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அதியுயர் சபை மற்றும் பைத்துல்மால் நிதியம் சட்டரீதியாக முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிறுவுதல், பைத்துல்மால் நிதியத்தினூடாக மாணவ மாணவிகளுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டங்களையும், சுகாதார வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், பெண் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை அதிகரிக்கச் செய்ய விசேட புலமைப்பரிசில் திட்டங்களை அறிமுகம் செய்தல், இலவச புனித உம்ரா பயண வசதிகள், பள்ளிவாசல்களில் பணி புரியும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவாத நிர்ணய சம்பளம் வழங்குதல், வக்பு சொத்துக்களை பாதுகாக்க விசேட ஆணைக்குழு போன்றன குறிப்பிடப்பட்டுள்ளது.

கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்ப துறைகளில் மாணவர்கள் சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கவும், விஞ்ஞான, கணித துறைகளில் பல்கலைக்கழக பிரவேச வீதத்தை அதிகரிக்கவும் கல்வி வலயங்கள் தோறும் விசேட செயல்முறைகளை அறிமுகம் செய்தல், கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் உயர்தர பாடசாலைகள் அமைத்தல், சர்வதேச நர்டுகளின் ஒத்துழைப்போடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலைகள் அமைத்தல், அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரி சபையின் NVQ தராதர சான்றிதழை பெற்ற பாடநெறிகளை அறிமுகப்படுத்தல், வீட்டுக்கு ஒரு பட்டதாரி போன்ற பல முக்கிய கல்விக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், நூதனசாலைகள், நூலகங்களை நிறுவுவதன் மூலம் புராதன, பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தல் மற்றும் இதனை சாத்தியமாக்க இலங்கை பல்கலைக்கழகங்களில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினை நிறுவுதல், அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை உள்ளிட்ட காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள திருத்தச்சட்ட ரீதியான ஆவணங்களை சமர்ப்பித்து மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் விசேட காணி மீட்பு ஆணைக்குழுவினை நிறுவுதல், கொழும்பு மாநகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்களின் குறைப்பாடுகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை, கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, கோரளைப்பற்று மத்தி பிரதேச சபை கோரிக்கை, தோப்பூர் பிரதேச செயலக கோரிக்கை, புத்தளம் அறுவக்காடு குப்பை கொட்டும் பிரச்சினை, கற்பிட்டி, அக்கரைப்பற்று(புத்தளம் மாவட்டம்) பிரதேச சபை கோரிக்கை மற்றும் குச்சவெளி, புல்மூட்டை காணிப் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் அதேவேளை, இனக்கலவரங்களில் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், சொத்துக்களுக்கு பூரண நட்டஈட்டினை பெற்றுத்தருவதாகவும், கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு நகர சபையாக தரமுயர்த்தல், வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை நவீன மயப்படுத்தி மீள திறக்கப்படுவதாகவும், நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உடனடியாக மக்களுக்கு வழங்குவதாகவும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


‘நமது கனவு’ எனும் மேற்படி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகள் – திட்டங்களை கண்காணித்து நடைமுறைப்படுத்த கண்காணிக்கும் விசேட குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s