மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், குழந்தை அதே இடத்தில நீடிப்பதாகவும், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (திங்கள்கிழமை) காலையில் மீட்புப் பணி நடக்கும் இடத்துக்கு வந்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்த பகுதி பாறை நிறைந்த பகுதி என்பதால் மீட்புப் பணி பெரும் சவாலை சந்தித்து வருகிறது’ என்று தெரிவித்தார்.
குழந்தை சுஜித் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 40 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், முழுமையாக குழி தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும் என்று தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்தில் 500 செ.மீட்டர் ஆழம் செல்வதாக கூறினார் ராதாகிருஷ்ணன். இந்த பணியை கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தவறான தகவல்கள் பரவக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாகவும் இருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதிய பள்ளத்தால் குழந்தை மீது மண் விழுந்ததாக கூறிய அவர், பலூன் தொழில்நுட்பம் மூலம் மீட்பதிலும் சிரமம் உள்ளது என்று தெரிவித்தார். குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற கவனத்தில் மீட்புப்பணி நடந்து வருவதாக ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.