அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் ‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எதற்காக போட்டியிடுகின்றார் – அதன் ஊடாக சமூகத்துக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது, ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகள் – சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்பட்டது. அத்துடன், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் – சவால்கள் – ஆபத்துக்களிலிருந்து சமூகத்தை பாதுகாத்து நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு ஒரே ஒரு வழி இந்த தேர்தல் முறையில் போட்டியிடுவதாகும் என்பதை அவர் மேலும் தெளிவுபடுத்தினார். 

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அவரது வியூகத்தை பாராட்டியதுடன், அது வெற்றியடைய துஆ செய்வதாகவும் தெரிவித்தனர்.