
கொழும்பு: இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
கொழும்பு – ஷங்கிரில்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்திடம் 13,784 பேர் சரணடைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, விடுதலைப்புலிகள் காணப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 6 மாதங்கள், ஒரு வருடம் அல்லது 2 வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் இடம்பெற்ற எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான புனர்வாழ்வு திட்டமொன்று முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் மிக வெற்றிகரமாக அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.