இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் 10 பேர் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தானுடனான தொடரினை புறக்கணித்த நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு கடந்த 24 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்கில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்திய இலங்கை அணியானது ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் பறிகொடுத்தபோதிலும், இருபதுக்கு – 20 தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை வைட் வோஷ் செய்தது.
இதனிடையே பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஏனைய நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுவதை தவிர்த்து வந்த நிலையில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டமைக்கு அந் நாட்டு கிரிக்கெட் சபை நன்றியை தெரிவித்திருந்தது.
அது மாத்திரமல்லாமல் ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படுகின்ற பலத்த பாதுகாப்பும் இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக இலங்கை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள், மைதானத்துக்கு செல்லும் பாதை, இலங்கை அணி பயணித்த பஸ்கள், போட்டி நடைபெறும் மைதானம் என்பவற்றுக்கு பலத்த இராணுவ பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் சுற்றுப் பயணத்தின் இறுதிப் போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. போட்டி நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியினர் தமக்கான பாதுகாப்பினை சிறப்பாக வழங்கி உதவிய பாகிஸ்தான் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து அவர்களை கெளரவித்திருந்தமை பெருமையாக பேசப்பட்டு வருகின்றது.