கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவிற்கு எதிராக ஆட்சேபனை மனுவினைத் தாக்கல் செய்தேன். கடந்த கால நிலவரங்களை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்ய வேண்டும் என ஜனசத பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை வேட்புமனு பத்திரத்தை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது சட்டத்திற்கு எதிராக சரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தல், அடிப்படைவாதத்தை எழுச்சி பெற செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் இவர் போட்டியிட தீர்மானித்து வேட்புமனு தாக்கல் செய் துள்ளார். அம்மனுவிற்கு எதிராக ஆட்சேபனை மனுவினை சுயாதீன முறையில் தாக்கல் செய்தேன்.
நாட்டு மக்கள் கடந்த காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களை கருத்திற் கொண்டு அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவசியம். அதுவே எமது பிரதான எதிர்பார்ப்பு என்றார்.