கொழும்பு: இலங்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள கடிதம்  குறித்து காவல்துறையினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை விடுக்கும் கடிதமொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் பல ஹோட்டல்கள் தாக்கப்படலாம் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் 21 போன்று மீண்டும் ஹோட்டல்களில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு கோட்டை காவல்துறையினரினால் அனுப்பப்பட்ட கடிதமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பல ஹோட்டல்களிற்கு இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கடிதம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொய் தகவல்களை பரப்பி மக்களை குழப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.