கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனை பிபிசி தமிழுக்கு உறுதி செய்தார். இதனால், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.
காமினி வியங்கொட மற்றும் கலாநிதி சந்திரகுப்த தேநுவர ஆகியோரினால் இந்த மனு கடந்த 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான ஆய்வுகள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரினால் கடந்த 30ஆம் தேதி முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, இந்த மனுவை கடந்த 2ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆராய்வதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமொன்று, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியினால் நியமிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் போலீஸ் மாஅதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரும் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.