கடந்த 21/4 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆபத்தான நடவடிக்கைகளால் இலங்கையின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நெருக்கடி குழு இதனை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல்வாதிகளும் சிங்கள தேசியவாதிகளும் பரந்துபட்ட முஸ்லீம் சமூகத்தை துன்புறுத்தி அவமானப்படுத்திய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளனர் என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.
சிங்கள தேசியவாதிகள் வன்முறை மற்றும் குரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச நெருக்கடி குழு முஸ்லீம் சமூகத்தை பொருளாதார ரீதியில் புறக்கணிப்பது முகத்தையும் உடலையும் மூடி ஆடையணியும் பெண்கள் மீதான தாக்குதல்கள் ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் முஸ்லீம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து இலங்கை முழுவதும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் உருவானது என தெரிவித்துள்ள சர்வதேச நெருக்கடி குழு இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தன்னெழுச்சியாக இடம்பெற்ற தாக்குதல் இல்லை பல வருடகாலமாக முஸ்லீம்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் முஸ்லீம்களிற்கு எதிரான தொடர்ச்சியே எனவும் தெரிவித்துள்ளது.
கண்டியில் கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல்களின் போது காணப்பட்டது போன்று இம்முறையும் சிங்களதேசியவாதிகள் தங்கள் ஆதரவாளர்களை பேருந்துகளில் கொண்டுவந்தனர்,பாதுகாப்பு படையினர் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு தவறியதுடன் சில இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களிற்கு உதவினார்கள் என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.
இந்த தருணத்தை முஸ்லீம்களின் பொருளாதார செழிப்பையும் அந்தஸ்த்தையும் பலவீனப்படுத்துவதற்கு சிங்கள தேசிய வாதிகளும் விமர்சகர்களும் பயன்படுத்தினார்கள் எனவும் சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் இடம்பெற்றவேளை இலங்கையின் பலவீனமான பிளவுபட்ட தலைமைத்துவம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.