புத்தளம்: மக்கள் மத்தியில் சிலரால் முன்னெடுக்கப்படும் பொய் பிரசாரங்களும், என்னைப் பற்றிய தவறான கருத்துக்களும் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ, முஸ்லிம் மக்கள் அவ்வாறான அச்சத்திலிருந்து மீண்டு தன்னுடைய முழுமையான வெற்றியின் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

இன்று நாம் பல்வேறு விடயங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அந்த வெற்றிகளில் அனைவருக்கும் பங்குண்டு. கடந்த 10 வருடங்களுக்கு அமைதியான சூழலை நாம் ஏற்படுத்தியிருந்தோம். எனினும் தற்போது அந்த அமைதியான சூழல் சிதைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் பாதுகாப்பின்மையால் அண்மையில் ஏற்பட்ட வீபரீதத்தை அனைவரும் அறிவார்கள். பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாகும். இவ்விடயத்தில் தமிழ் , சிங்களம் , முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. 

என்னால் மீண்டும் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும். இதுவே எமது பிரதான இலக்காகும். அதற்கமைய நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்துவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.