ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய நீண்டநாள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. கட்சித்தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்று முன்தினமிரவு (20) நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன.

இந்த இணக்கத்திற்கமைவாக, எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்படுவாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைக் கட்சியின் யாப்பு விதிகளுக்கமைய மேற்கொள்வதென்றும் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். வேட்புமனு குழுவில் பெயரைப் பரிந்துரைத்துப் பெரும்பாலானவர்களின் ஆதரவுடன் அறிவிப்பைச் செய்வதென்றும் தேவையேற்படின் வாக்கெடுப்பு நடத்துவதெனவும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டி மீண்டும் அனைவரும் பொது இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிற்குப் புதிதாக 25பேரை நியமிப்பதற்குப் பிரதமர் எடுத்திருந்த தீர்மானமும் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த இணக்கதிற்கமைய கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் தெரியவருகிறது.