அறியாக்குழந்தைகள்

வை எல் எஸ் ஹமீட்

சஜித் பிரேமதாசவுக்குத்தான் ஆதரவுஎன்பதன் சரி, பிழை ஒரு புறம் இருக்கட்டும். அவ்வாறு கூறமுன் அவருடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதா? அல்லது அவ்வாறு பேசுவதற்கு முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லையா? தே கூ அமைப்பைத் தனியாக சந்திக்கிறார்; சஜித். அவர்கள் தீர்வுத்திட்டத்திற்கு முன்னுரிமை தருபவர்களுக்கு ஆதரவு தருவோம்; என்கிறார்கள். முடிவைக்கூறவில்லை.

நாமும் ஒரு சிறுபான்மை. நமக்குத்தான் இந்நாட்டில் ஆகக்கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன. முட்டுக்கொடுத்த தற்போதைய ஆட்சியிலும் எந்தப்பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. நாம் ஆதரவளிக்கப்போகின்றவரிடமாவது அவற்றைப்பற்றிப் பேசி சில உடன்பாடுகளுக்கு வரத்தேவையில்லையா?

முஸ்லிம்களுக்கெதிரான இனவாதியாக அனைவராலும் சித்தரிக்கப்படுகின்ற சம்பிக்க, மற்றும் மலையக கட்சிகளுடன் கூட்டாக, கூட்டத்தில் கோவிந்தா போடும் சந்திப்பில் முஸ்லிம்கள் தொடர்பாக என்ன பேசமுடியும்? அவ்வாறு பேசப்பட்டதா?

முஸ்லிம் கட்சிகள், தம்மைத் தனியாகத்தான் சந்திக்க வேண்டும். முடிவைக்கூறமுன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவருடன் பேசவேண்டும். அவை தொடர்பாக அவரது நிலைப்பாட்டை அறியவேண்டும்; என ஏன் கூறவில்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும். தே கூட்டமைப்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைத் தனியாக சந்திக்க விரும்பிய சஜித் முஸ்லிம்களையும் தனியாக சந்திக்கவேண்டும்; என ஏன் சிந்திக்கவில்லை.

இதிலிருந்து தே கூ அமைப்பிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தைக்கூட முஸ்லிம்கட்சிகளுக்கு கொடுக்க தயாரில்லை; என்ற சஜித்தின் நிலைப்பாடு புரியவில்லையா?

ரணில்தான் முஸ்லிம் கட்சிகளை செல்லாக்காசாகப் பார்த்தார். முஸ்லிம் கட்சிகளைக் கணக்கில் எடுத்திருந்தால் சட்டம், ஒழுங்கு அமைச்சைத் தான் வைத்திருந்தும் ஐந்து நாட்கள் திகன கலவரம் கொழுந்துவிட்டெரிய கண்டும் காணாமல் இருந்திருப்பாரா? முஸ்லிம் கட்சிகள் நம்மைவிட்டு ஓடிவிடும்; ஆட்சி கவிழ்ந்துவிடும்; என்ற அச்சம் அவருக்கு இருந்திருந்தால் ஐந்து நாட்கள் என்ன! கலவரம் நடக்காமலேயே தடுத்திருக்க முடியாதா?

ரணிலிடம்தான் நாம் செல்லாக்காசு; என்றால் சஜித்திடமும் அது தொடர்கதையாகப் போகின்றதா?

இங்கு ஒரு வாதத்தை முன்வைக்கலாம். அவர் இன்னும் வேட்பாளராக பெயரிடப்படவில்லையே! அவ்வாறு பெயரிடப்பட்ட பின்னர்தானே பேசவேண்டும்; என்று.

ஆம்; நல்ல வாதம். அவர் பெயரிடப்படட்டும். அதன்பின் அவருடன் பேசி அதன்பின் முடிவை அறிவிக்கலாமே! பெயரிடப்பட முன்னரே ஆதரவை அறிவித்ததேன்? அவரே வேட்பாளராக வரவேண்டுமென்பதனால்தானே! அவ்வாறாயின் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அது எந்த அடிப்படையில்? என்ன உத்தரவாதத்தின் அடிப்படையில்? பேசுவதற்கே சந்தர்ப்பம் தராமல் கூட்டத்தில் கோவிந்தா சந்திப்பு! முடிவு அறிவிப்பு!!

சரி; சஜித் பெயரிடப்பட்டுவிட்டார்; எனக் கொள்வோம். முடிவை அறிவித்தபின் கண்துடைப்பிற்காக பேச்சுவார்த்தையா? முடிவைச் சொன்னதன்பின் நமது கோரிக்கைகளுக்கு என்ன முக்கியத்துவம் தருவார்?

சரி; அவர் நமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் ஏற்கனவே ஆதரவை அறிவித்துவிட்டு இப்பொழுது வாபஸ் வாங்குவதா?

ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்தும் இருக்கவேண்டும்; அது முஸ்லிம்களுக்குப் பேரம்பேசும் சக்தியைத் தருகிறது; என்கின்றோம். ஆனால் எதையும் பேசாமல், எதுவித உத்தரவாதமுமில்லாமல் பெயரிடப்படுமுன்னே ஆதரவைத் தெரிவிக்கின்றோம். அடுத்த சமூகம் உத்தரவாதம் தருபவர்க்கு ஆதரவளிப்போம்; எனும்போது நாம் பொழுதுவிடிய முன்பே ஆதரவைத் தெரிவிக்கின்றோம். எங்கே ஜனாதிபதித் தேர்தலின் பேரம்பேசும் சக்தி?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித ஒப்பந்தமுமின்றி வாக்குகளைத் தாரைவார்த்தோம். (கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒப்பந்தம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தியதற்காக ஒரு பெருந்தலைவருடன் கைவயாத அளவு சண்டையும் பிடித்து சதிவலைக்குள் தள்ளப்பட்ட அனுபவமும் உண்டு.)

பாராளுமன்றில் தனது முட்டில் தங்கியிருக்கும் அரசைக்கொண்டு கல்முனை செயலகப் பிரச்சினையைக்கூட தீர்க்க முடியாத சக்திவாய்ந்த அரசியல்கட்சிகள் நாம். ஜனாதிபதித் தேர்தலையும் பாவிக்கத் தெரியாத பெரும் அரசியல் கட்சிகள் நாம்.

முகநூலில் வீரம்பேசுவோம். வாக்களிக்கும் யந்திரங்கள் முஸ்லிம்கள். அடிவிழுந்தால் அழுவார்கள். அதன்பின் மறந்துவிடுவார்கள். மீண்டும் நாம் சொல்வதுபோல் வாக்களிப்பார்கள். நமது காட்டில் மழைதான்.

அரசியல்வாதிகளுக்கும் மறுமை இருக்கின்றது. நினைவிருக்கட்டும்!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s