காத்தான்குடி: ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர். சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஆசாத்தின் தந்தை நஸார், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு வந்ததாக, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
அவ்வாறு புலிகள் இயக்க உறுப்பினராகச் செயற்பட்டமைக்காகவே, 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் வைத்து, அப்போது ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் நஸார் கொல்லப்பட்டதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் கூறினார்.
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் சுமார் 10 வருடங்கள் அஸ்பர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டு காத்தான்குடி 5ஆம் பிரிவு – கிளினிக் வீதியில் அமைந்துள்ள தன்னுடைய மூத்த சகோதரியின் வீட்டில் வைத்து, நஸார் மீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
“நானும், எனது தாயாரும், என்னுடைய சிறிய வயது பிள்ளைகளும் வீட்டில் இருந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்குப் பின் பக்கம் நஸார் கத்தும் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்தார். யாரோ சிலர், அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்”.
(சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத்)
“காயப்பட்ட அவரை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினோம். அப்போது அங்கு திடீரென வந்த ஒருவர், வெட்டுக் காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஸாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார். நஸாரின் உயிர் பிரிந்து விட்டது” என்று, 29 வருடங்களுக்கு முன்னர், நஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார் அவரின் மூத்த சகோதரி சுபைதா உம்மா.
ஆனாலும், நஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்கிறார் அவர்.
நஸாரின் மூத்த சகோதரியை காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டில்தான் நாம் சந்தித்துப் பேசினோம். அது உயரம் குறைந்த – ஒரு சிறிய வீடு. நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் தரையை கையால் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தில் நஸாரை கிடத்தியிருந்த போதுதான் அவரின் உயிர் பிரிந்தது” என்றார்.
நஸாரின் பெற்றோருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நால்வர் ஆண்கள். நஸார் எப்போது பிறந்தார் என சுபைதா உம்மாவுக்கு நினைவில்லை. ஆனாலும் அவர் கூறிய சில தகவல்களை வைத்து 1957ஆம் ஆண்டு நஸார் பிறந்திருக்கலாம் என அனுமானிக்க முடிந்தது
நஸார் கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபரொருவரும் ‘அந்த சம்பவம்’ பற்றி பேசினார். ஆயினும், தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், எங்கள் வீதியில் போலீஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இரவு வேளைகளில்தான் அங்கு போலீஸார் வருவார்கள். நஸார் மீது காலை 11.00 மணியளவில் அந்தத் தாக்குதல் நடந்தது. புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தமைக்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்” என்றார் அந்த அயல்வீட்டுக்காரர்.
நஸாரின் ஜனாஸாவுக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தது என்றும், அந்தப் பள்ளிவாசலுக்குரிய மையவாடியில்தான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆரம்பத்தில் நஸார் கைத்தறியில் நெசவு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத்.