கொழும்பு: ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு அவர் தனது பரப்புரைகளை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்.

மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பரப்புரைகளை மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நாட்டின் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் முரண்பாடுகள் வலுத்துள்ளமையால் இழுபறியான நிலைமைகள் தொடருகின்றன.

குறிப்பாக, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதாகவும் அவ்வாறான சந்தர்ப்பம் இல்லாது விட்டால் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் கூறியிரு0க்கின்றார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வரும், ஐ.தே.கவின் பிரதித்தலைவருமான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இதனைவிட மாவட்ட ரீதியாக அவர் சார்ந்த அணியினர் பரப்புரைக் கூட்டங்களுக்கு நிகராக மக்களை அணிதிரட்டி மாபெரும் கூட்டங்களை நடத்திவருகின்றனர். இக்கூட்டங்களுக்கு கட்சித்தலைமைத்துவம் தடைகளை விதித்தபோதும் அவற்றை உடைத்தெறிந்து தொடர்ச்சியாக கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

இந்தக் கூட்டங்களில் பௌத்தசாசனம், வீடமைப்பு, கலாசாரம் இப்படி பல விடயங்களை மையப்படுத்தி தனது திட்டங்கள் சார்ந்த  கருத்துக்களை வெளியிடுகின்றார். அத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற வந்த தனது தந்தையை தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலை செய்துவிட்டனர் என்பதையும் இந்த மேடைகளில் நாசுக்காக கூறுவதற்கு அவர் மறப்பதும் இல்லை.

பிரதமர் ரணிலுக்கும், அமைச்சர் சஜித்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பங்காளிக்கட்சிகளின் ஆதரவினையும், சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாமானது என்று பிரதமர் ரணில், சஜித்துக்கு கூறியுள்ளார். ஆகவே அத்தரப்புக்களின் நிலைப்பாட்டினையும், மத்திய செயற்குழு, கட்சித்தலைவர்கள் குழு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் தான் வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும் பிரதமர் ரணில் சஜித்திடம் சுட்டிக்கூறத் தவறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான கதை இவ்வாறு நீண்டுகொண்டிருக்கையில், ராஜபக்ஷ யுகத்தின் அனுபவத்தினைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினர் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, வாழ்வுரிமைக்காகவும், நீதிக்காவும் தற்போதும் போரடிவருகின்ற தமிழர்கள் ராஜபக்ஷ தரப்பினை ஆதரிக்கும் முடிவை எடுப்பார்கள் என்று சிந்திக்கவே முடியாது. அதேநேரம், தமிழர்கள் விவாகரம் தொடர்பிலான தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தாது சமத்துவம் பற்றி பேசிவரும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரையும் தமிழர்கள் எடுத்த எடுப்பில் ஆதரித்துவிட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியினரே நீதிமன்ற வழக்கின் ஊடாக தமிழர் தயாகத்தினை பிரித்தவர்கள் என்றவிடயம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்ததொரு விடயமாக உள்ளது. அதனடிப்படையில் அநுரகுமார குறித்து தமிழர்கள் எளிதான முடிவொன்றை எடுத்த எடுப்பில் எடுத்துவிடமாட்டார்கள்.

இந்தப்பின்னணயில் பார்க்கின்றபோது தமிழ்த் தரப்பின் ஆதரவுக்கரம் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே செல்கின்றது. அவ்வாறு செல்கின்றபோது ரணிலையா இல்லை சஜித்தையா ஆதரிப்பது என்பதில் பல்வேறு தர்க்கங்கள் ஏற்படுகின்றன.

தமிழ் மக்களின் ஆணைபெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் எந்தமுடிவு எடுக்கப்போகின்றது என்பதுதான் தற்போது பேசுபொருளாக இருக்கி;ன்றது. ஜனாதிபதி தேர்தல் குறித்து கூட்டமைப்பு இதுவரையில் உத்தியோகபூர்வமாக கூடி ஆராந்திருக்கவில்லை.

அதற்கு முன்னதாகவே கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கான ஆதரவுக்குரலை பொதுவெளியிலேயே தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனினும் கூட்டமைப்பின் தலைமையோ, சிரேஷ்ட உறுப்பினர்களோ எவ்விதமான பகிரங்க கருத்துக்களையும் வெளிப்படுத்தாது மௌனம் காத்து வருகின்றனர்.

முன்னதாக, அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பில்  கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சஜித் பிரேமதாஸவை அவருடைய இல்லத்தில் சந்தித்திருந்தார். இதன்போது தமக்கான ஆதரவை அவர் கோரியிருந்தபோதும் கூட்டமைப்பாகவே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக கூறிவிட்டு வந்திருக்கின்றார் சம்பந்தன்.

பின்னர், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழில் நடைபெற்றபோது, அதன் இறுதிநாளான கடந்த திங்கட்கிழமையன்று அதில் கலந்துகொள்வதற்காகவும் வேறு சில  நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் யாழ் சென்றிருந்த சஜித் பிரேமதாஸவை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார்கள்.

இதன்போதும், சஜித் பிரேமதாஸ தனக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அச்சமயத்தில், ஐ.தே.க வேட்பாளரை உத்தியோக பூர்வமாக அறிவித்த பின்னரே நாம் எமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என்று சுமந்திரன் எம்.பி சாணக்கியமான பதிலொன்றை கூறியிருக்கின்றார். சஜித் விடயத்தில் கூட்டமைப்பு கழுவிய மீனில் நழுவிய மீனாகவே இருந்து வருகின்றது.

தமிழர் அரசியல் தரப்பின் நிலைப்பாடு அவ்வாறிருக்கையில் ஒவ்வொரு தமிழ் மகனின் மனதிலும் சஜித் பிரேமதாஸ மீது நம்பிக்கை வைக்கலாமா என்ற கேள்வி இல்லாமில்லை.

தமிழர் வரலாற்றில் இதுவரையிலான காலத்திலும், ஒவ்வொரு ஜனாதிபதியும் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை மறுதலிப்பதுமே நடந்து வந்திருக்கின்றது. இந்த அனுபவம் ஒருபுறமிருக்கையில், 2015இலிருந்து  ஜனநாயக வெளியொன்று ஏற்பட்டிருப்பதாக உணரும் தமிழ் மக்கள் அதிலிருந்து பின்நோக்கிய நிலைமை ஏற்படுவதை விரும்பபோவதில்லை.

இப்பின்னணியில் இருந்துகொண்டு சஜித் பிரேமதாஸ விடயத்தினை நோக்கும் போது  அவருடைய தந்தையார் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்ற சிந்தனையும், அதன் வெளிப்பாடும் தற்போதும் அவரிடத்தில் காணப்படுகின்றது.

இதனைவிடவும், தான் பௌத்தன் என்று வாயால் கூறுவதை விடவும் நாடாளவிய ரீதியில் பௌத்த மத பாடசாலைகளையும், மண்டபங்களையும், தாதுகோபுரங்களையும் ஆயிரக்கணக்கில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் நிர்மாணிக்க திட்;டமிட்டுள்ளதாக கூறுகின்றார். சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டிருக்கும் தமிழர்கள் இந்த அறிவிப்பினை எவ்வாறு பார்க்கப்போகின்றார்கள்.

மேலும், தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தினையே அமுலாக்குவேன் என்று கூறும் சஜித் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி மூச்சுவிடுவதாக இல்லை. அதுமட்டுமன்றி தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அவருடைய அதியுச்ச நிலைப்பாடே 13ஆம் திருத்தச்சட்டம் என்றால் சமஷ்டி அங்கலட்சங்களுடன் கூடிய அதிகாரப்பகிர்வினை கோரும் தமிழர்கள் இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது

இவற்றை விடவும், தற்போது 52 வயதாகும் சஜித் பிரேமதாஸ நாட்டிற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு அதீத விருப்பை தானாகவே வெளிப்படுத்துகின்றார். அவ்வாறான ஒருவர் அடுத்தவரும் காலத்தில் ஆட்சி அதிகாரங்களை தக்கவைப்பதற்கு சிந்திப்பதே இயல்பான சுபாபமாகும்.

20 ஆண்டுகள் அரியாசனத்தில் தொடர்ந்து அமர விரும்பவதை விடுத்து அதிகாரங்களை பகிர்ந்தளித்து, நிறைவேற்று அதிகாரத்தினை முற்றாக ஒழித்து வெஸ்மினிஸ்டர் முறைமையை ஒத்த பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் நிலைப்பாட்டினை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது நேர் மறையான சிந்தனையாகவே இருக்கும்.

சஜித் பிரேமதாஸ, வடக்கிற்கு செல்கின்றார் கிழக்கிற்கு செல்கின்றார், வீடுகள் வழங்குகின்றார், கால்பந்தும், கிரிக்கெட்டும் விளையாடுகின்றார் என்பதற்காக அவர் மீது தமிழ் மக்கள் எழுந்தமான நம்பிக்கை வைத்து இறுதியில் இதே நிலை மீண்டும் வராது என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.

ஆகவே, ரணில், சஜித் வியடத்தில் தமிழர் தரப்பு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்போகின்றது என்பது மிக முக்கியமான விடயமாகின்றது. இதில் மக்களின் நிலைப்பாடுகளுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதும் மிகப்பெரும் வினாவாகின்றது. அதேபோன்று சஜித் எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தன்னை நிரூபிக்கப்போகின்றார் என்பது தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பார்பாகவுள்ளது.

ஆர்.ராம்