டெல்லி: போலி பாஸ்போட் வைத்துக்கொண்டு, 81 வயது முதியவராக மேக்அப் போட்டு, நியூயார்க் செல்ல இருந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான ஜெயேஷ் படேல் என்பவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தாடிக்கு வெள்ளை டை அடித்து, பெரிய மூக்குக் கண்ணாடி அணிந்து சக்கர நாற்காலியிலிருந்தபடி, முதல் கட்ட பாதுகாப்பு சோதனையையும், குடிவரவு சோதனைகளையும் படேல் கடந்து சென்றிருந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், எல்லா அதிகாரிகளையும் ஏமாற்றிவிட முடியாதுதானே.
“அவர் நிச்சயமாக 80 வயது முதியவராக இருக்க முடியாது. அவரது தோல் இளைஞருக்கு இருப்பது போன்றிருந்தது” என்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்ஃஎப்) செய்தி தொடர்பாளர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பிந்தைய பாதுகாப்பு சோதனையின்போது, தான் எழுந்து நிற்பதற்கு முடியாத அளவுக்கு முதியவர் என்று கூறி சோதனை செய்ய படேல் மறுத்தபோது சந்தேகம் எழுந்துள்ளது.
ஆவணங்களைக் கேட்டபோது, அமிரிக் சிங் என்ற பெயரிலிருந்த பாஸ்போட்டை அவர் வழங்கினார். அதில் 1938ம் ஆண்டு பிப்ரவரி 1-ம்தேதி அவர் டெல்லியில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பயணியின் தோற்றமும், தோல் அமைப்பும் பாஸ்போட்டில் குறிப்பிடப்பட்டதை விட, இளைஞர் ஒருவரைபோல இருந்தது என்கிறார் சிஐஎஸ்ஃஎப் செய்தி தொடர்பாளர்.
விசாரணையின்போது, மேக்அப் போட்டு முதிய வேடத்தில் இருப்பதையும் இந்த பாஸ்போட் போலியானது என்பதையும் படேல் ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட படேல் குடிவரவு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணை தொடர்ந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த படேல், முகவர் ஒருவர் மூலம் அமெரிக்க விசாவும், இந்த பாஸ்போட்டையும் பெற்றுள்ளதாக இந்திய காவல்துறை என்டிடிவியிடம் தெரிவித்துள்ளது.
மேக்அப்-பும், தலைப்பாகையோடு கூடிய ஆடைகளும் டெல்லியின் ஹோட்டல் அறையில் வைத்து இவருக்கு வழங்க இந்த முகவர் ஏற்பாடு செய்துள்ளார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
“அமெரிக்கா சென்று வேலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவருடைய நிலைக்கு எளிதாக அமெரிக்க விசா கிடைத்திருக்காது” என்று சஞ்சாய் பாட்டியா தெரிவித்தார்.