கொழும்பு: 71 வருடகால தவறான அரசியல்தீர்மானத்தை மேற்கொண்ட மக்கள் இம்முறை தவறை  திருத்திக் கொள்ள வேண்டும் என  மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தொழில் புரியும் மக்களின் மாநாடு இன்று (12) சுகததாச உள்ளக அரசங்கில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

71 வருட கால  முறையற்ற  அரசியல் நிர்வாகத்தையே  பிரதான இரண்டு கட்சிகளும் முன்னெடுக்கின்றது. உழைக்கும் மக்களின்  உரிமைகள்  சர்வாதிகாரமாக முறையில் அடக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில்  உரிமைகளுக்காக போராடிய மக்கள்  துப்பாக்கி சூட்டுக்கு  பலியானார்கள். இவற்றை ஒரு தரப்பினர் இன்று மறந்து விட்டு தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கின்றார்கள்.

அரச திணைக்களங்கள் தொடர்ந்து  நட்டத்தை எதிர்க் கொள்ளும் ஒரு நிறுவனமாகவே காணப்படுகின்றது. கடந்த அரசாங்கமும், நடப்பு அரசாங்கமும் ஆளுபவர்களிடமே உருவ மாற்றம் காணப்படுகின்றதே தவிர, கொள்கை ரீதியிலும், தேசிய நிதி மோசடியிலும் எவ்வித மாற்றமும் கிடையாது. இரு தரப்பினரும் தேசிய நிதி மோசடியில் நெருங்கிய நண்பர்கள்.

அரசியல் வாதிகளின் தலையீட்டினாலும், பரிந்துரையினாலும்  அரச திணைக்கள தலைவர்களும், உயர் பதவிகளுக்கு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவதை முதலில் தவிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறைக்கு அத்துறையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர் நியமிக்கப்படுதல் அவசியம். எமது அரசாங்கத்தில்  கல்வி தகைமையுள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.