லாகூர்: முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. உலகின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னராக வலம் வந்தவர் அப்துல் காதிர். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனக்கென தனி பாணியில் சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஜாம்பவான்.
இவரது பந்து வீச்சு சுழலில் சிக்காதவர்களே இல்லை. 67 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார் அப்துல் காதிர். 1993ம் ஆண்டு இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
லாகூரில் வசித்து வந்த அப்துல் காதிருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்படவே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
அப்துல் காதிருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளை, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல் மணந்துள்ளார். தனது காலத்தில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் காதிர். அவர் பந்து வீசுவதே தனி பாணியாக இருக்கும். வழக்கமான சுழற்பந்து வீச்சாக இல்லாமல் தனித்துவம் கொண்டது காதிரின் பந்து வீச்சு. டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 132 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
மாயாஜால பந்து வீச்சாளர், மந்திரக் கை பந்து வீச்ச்சாளர் என பல பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரரான அப்துல் காதிரின் மரணம் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.
இம்ரான் கான் கேப்டனாக இருந்த காலத்தில் அப்துல் காதிர் மிகப் பெரிய அளவில் ஜொலித்தார். இம்ரான் கானுக்கு மிக மிகப் பிடித்த சுழற்பந்து வீச்சாளரும் கூட. காதிரின் சாதனையான 9/56 விக்கெட் கூட இம்ரான் கான் கேப்டனாக இருந்த சமயத்தில்தான் வந்தது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்திருந்தார் அப்துல் காதிர்.