இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். பண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அங்கு நிரந்தர வசிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மலேசியா இக்கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

“ஜாகிர் நாயக் இந்தியா செல்லும் பட்சத்தில், அவரது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். மேலும் அவரை வேறு எந்த நாடும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரால் மலேசியாவில் எந்தவிதப் பிரச்சனையும் எழாதவரை அவர் இங்கு தங்கி இருக்கலாம்,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாகிர் நாயக், அங்குள்ள இந்திய, சீன வம்சாவளியினர் குறித்து தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை வெடித்தது.

மலேசிய வாழ் இந்தியர்களின் விசுவாசம் குறித்து அவர் பேசியது கண்டனத்துக்குரியது என்றும், மலேசிய வாழ் சீனர்களை தமக்கு முன்பே அந்நாட்டிற்கு வந்த விருந்தாளிகள் என்றும் ஜாகிர் குறிப்பிட்டது பெரும் எதிர்ப்பைத் தந்தது.

இதையடுத்து, மலேசியாவில் பல்வேறு தரப்பினரும் அவரை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மலேசிய அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ள நான்கு இந்திய வம்சாவளி அமைச்சர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

ஆனால் ஜாகிர் நாயக் இனவாத அரசியலைத் தொட்டுப் பேசியதன் மூலம், எல்லை கடந்துவிட்டார் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் மகாதீர், ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதில்லை என்ற மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அண்மையில் மீண்டும் அறிவித்தார். இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்க அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதியும், மலேசியப் பிரதமர் மகாதீரும் நேரில் சந்தித்துப் பேசினர்.

அச்சமயம் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரம் குறித்து நரேந்திர மோதி மலேசிய தரப்பிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாதீரிடம், இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், இக்கோரிக்கை தொடர்பாக மலேசியப் பிரதமர் ஏதேனும் உறுதி அளித்தாரா என்பது தெரியவில்லை.

“இந்த விவகாரம் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று. எனவே இது தொடர்பாக இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்பில் இருப்பது என முடிவாகி உள்ளது,” என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.