பலத்த பாதுகாப்புடன் இடம்பெறும் போரா மாநாடு

புதுக்கடை நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (01) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மேற்கொள்வதற்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த உத்தரவில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுமாயின், சமாதான நடவடிக்கைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவு சிங்கள தேசிய படையணியின் அழைப்பாளர் மெடில்ல பஞ்சாலோக்க தேரர், ராவண பலய அழைப்பாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவை இன்று பிற்பகல் மெடில்ல பஞ்சாலோக்க தேரரிடம் கையளித்துள்ளதாக பொலசார் தெரிவித்தனர்.

இதேவேளை, 2019 சர்வதேச போரா மாநாடு இன்று (01) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறுகிறது.

‘இலங்கை உங்களை நம்புகிறது’ என்ற கருப்பொருளுடன் இடம்பெறும் இம்மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் உட்பட 21,000 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக போரா ஆன்மீகத் தலைவர், 53ஆவது  செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார்.

மாநாடு தொடர்பில், கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையான கடலோரப் பாதையில் பொலிசாரினால் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதோடு, கடல், தரை, வான் வழி ரீதியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடையுத்தரவு தொடர்பில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மெடில்ல பஞ்சாலோக தேரர், மலேசிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையானது, சிறு தொகை பணத்திற்காக மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை புறக்கணிப்பதாக அமைவதாக தெரிவித்திருந்தார்.

குறித்த மாநாடு தொடர்பில், நீர்கொழும்பு, அவிசாவளை, நிட்டம்புவ, களுத்துறை போன்ற பகுதிகளிலுள்ள அனைத்து பிரபல ஹோட்டல்களும் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுமார் 25,000 பேர் கலந்துகொள்ளும் இம்மாநாட்டின் மூலம் 130 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கும் எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

போரா சமூகத்தவர்கள், மாணிக்கம் மற்றும் கைப்பணி பொருட்கள் தொடர்பில் பிரபலமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

உலகளாவிய ரீதியில் 1.2 மில்லியன் போரா சமூகத்தவர்கள் வாழ்வதோடு, இலங்கையில் 2,600 பேர் வாழ்வதாக, தொகைமதிப்பு புள்ளி விபரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007 இலும் இலங்கையில் போரா மாநாடு இடம்பெற்றதோடு, இம்மாநாட்டில் சுமார் 12,000 பேர் கலந்து கொண்டதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s