ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்லசந்த அழகியவண்ண ஆகியோரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அக்கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் இழுபறி நிலையில் உள்ள பரந்துப்பட்ட கூட்டணி விவகாரத்திற்கு இம்மாத காலத்திற்குள் ஒரு தீர்வை பெறும் நோக்கில் பேச்சுவார்த்தை இடம்பெற்றன.
இரு தரப்பு பேச்சுவாரத்தையில் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 30 ஆக மட்டுப்படுத்தல், தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் சிறந்த கொள்கைத்திட்டங்களைபகிரங்கப்படுத்தி அவற்றை செயற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகள் பரிந்துரை செய்யப்பட்டன.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பான அடுத்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து பேச இணக்கம் எட்டப்பட்டது.